வியாழன், 9 ஜூன், 2022

#1142 - பணக்காரங்க யாரும் பரலோகம் போக முடியாதா பிரதர்?

*#1142 - பணக்காரங்க யாரும் பரலோகம் போக முடியாதா பிரதர்?* மத். 19:24ல்
மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றுள்ளதே? புதிய ஏற்பாட்டு காலத்தில் அப்போஸ்தலர்கள் கஷ்டப்பட்டு ஊழியம் பண்ணினாங்க. அடுத்தது மிஷனரிமார்கள் கஷ்டப்பட்டு ஊழியம் செய்தாங்க ஆனா இன்றைக்கு ஊழியக்காரன் எல்லாருமே பணக்காரர்களாக இருக்கிறார்கள். கேட்டால் தேவன் எங்களை ஆசீர்வதித்தார் அப்படின்னு சொல்றாங்க இரண்டையும் ஒப்பிட்டு கொஞ்சம் விளக்கம் கொடுங்க பிரதர்.

*பதில்* : நீங்கள் குறிப்பிட்ட வசனத்திற்கு கொஞ்சம் மேலே வாசித்தால் ஒரு காரியம் நம் மனதில் தெளிவுபடும்.

22ம் வசனத்தைக் கவனிக்கவும்.   மத். 19:22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.

நித்திய ஜீவனை எப்படி அடைவது என்று இயேசு கிறிஸ்துவினிடம் வந்த இந்த பணக்காரன் கேட்கும் போது (மத். 19:16) அவனது உள்ளம் முழுவதும் பணத்தால் நிறைந்துள்ளதையறிந்த இரட்சகர் அவனது குறையை சுட்டிக்காண்பிக்கிறார்.

சகலவற்றையும் தான் சரியானவனாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் (மத். 19:20). மேட்டிமை எண்ணங்களும் அவனில் காணப்படுகிறது.

தான் அனைத்து கட்டளைகளையும் கடைபிடிப்பவன் என்றும் இன்னும் வேறெதாவது இருந்தாலும் அதையும் என்னால் செய்யமுடியும் (தன் பணபலத்தால் சாதித்துவிடலாம் என்று நினைத்திருப்பானோ?) என்று சொன்னபொழுது அவனது மனம் முழுவதும் பணத்தில் இருந்ததையறிந்த ஆண்டவர் – அவனிடம் சொன்னது  மத். 19:21-22 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான்.

பணக்காரனாயிருப்பது பெரிதல்ல… பணத்தின் மீது மனம் வைப்பதே பரலோகப் பாதையை இவர்களுக்கு அடைத்துவிடுகிறது என்று இயேசு கிறிஸ்து தெளிவுபடுத்தினார்.  மத். 19:23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஐசுவரியவான்கள் பரலோகம் போகமுடியாதென்று சொல்லப்படவில்லை.. மாறாக அரிது என்றார்.  ஏனென்றால் பணம் சம்பாதிக்க தீவிரிப்பவர்கள் நேர்மை, தர்மம் மற்றும் கொள்கையையும் கடமையையும் தவறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. எப்படியாவது இந்த வேலை வேண்டும் என்று லஞ்சம் கொடுப்பதும், ஏமாற்றுவதும், பொய் பேசுவதும் இதில் அடங்குகிறது.

வாரம் முழுவதும் தனது இஷ்டப்படி சாங்கோபாங்கமாக வாழ்ந்து விட்டு ஞாயிறன்று மூன்றாவது பாட்டு பாடும் கடைசி சரணங்களில் பரிசுத்தவானாக தன்னை மாற்றிக்கொண்டுவிட்டதாக நினைத்துக்கொள்கிற அநேக மதகிறிஸ்தவர்கள் இன்று பெருகிவிட்டது உண்மையே. இரட்சிப்பையே விலை பேசி விற்பவர்கள் இவர்கள். கிறிஸ்துவின் பெயரால் வசூல் வேட்டை நடத்தி மாதந்தோறும் வசனத்தால் மிரட்டி தசமபாகம் என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்கள். சபையாரை மிரட்டி தங்களுக்கு கார், பங்களா என்று சகல வசதியோடு வளர்ந்தாலும் – பரலோக கதவு இவர்களுக்கு திறக்குமா என்பது பெரிய கேள்விதான். தேவனுக்கு முன்பாகவே பயமின்றி ஆட்டம் பாட்டத்துடன் சகல பொய் நாவுகளோடு தங்களை பரிசுத்தவான்களாக காட்டி ஊரை ஏமாற்றலாம். வசனமே நியாயந்தீர்க்கிறது என்பதால் விரைவில் மனந்திரும்பவேண்டியது அவசியமே.

வேதாகமத்தில் ஆபிரகாம், யோபு, தாவீது போன்ற அனைவரும் மிகப்பெரிய ஐசுவரியவான்கள்.  ஆதி 13:2; 24:35; யோபு 1:3. அதே நேரத்தில் தேவனுக்கு பிரியமானவர்களாக வாழ்ந்தவர்கள். தேவனே சாட்சி கொடுக்கும் அளவிற்கு அவர்கள் வாழ்ந்தார்கள். அப். 19:22

ஆகவே, ஐசுவரியவானாயிருப்பது தவறல்ல. ஆனால் அந்த ஐசுவரியத்தின் மீது பற்றுதலாயிருப்பதே தவறு. 1தீமோ. 6:9-10

இயேசுவிடம் வந்த வாலிபனுக்கு நித்திய ஜீவன் அவசியமாயிருந்து இயேசு கிறிஸ்துவை உண்மையாய் நம்பியிருந்தால் – அவர் சொன்னதன்படியே செய்திருப்பான் !! ஆனால், அவனது நோக்கம் அதுவல்ல என்பது தெளிவு.

*எடி ஜோயல் சில்ஸ்பி*

ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக