*இன்றாகிலும் ஒப்பிட்டுப் பார்க்க சமயம் உண்டா?*
by : Eddy Joel Silsbee
சபைக்கு தலையாகிய கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.
கிறிஸ்துவை தலையாகக் கொண்டிருக்கிற ஒவ்வொரு கிறிஸ்தவரும்; அவரது சபை என்றழைக்கப்படும் *அவருடைய சரீரத்தில்* அங்கமாய் இருக்கிறார்கள்.
*கிறிஸ்துவை* தலையாய் கொண்டிருக்கும் அந்த சரீரம்;
தனது தலை சொல்லாததற்கு கீழ்படியாது.
அருகாமையிலிருக்கும் வேறொரு தலை சொல்வதை சரீரத்தின் அங்கங்கள் உணர்ந்தாலும், கேட்டாலும் “சொந்த தலை (கிறிஸ்து)” அதை ஆமோதித்து கட்டளையிடும் வரை அதாவது அவரது வார்த்தையில் (வேதாகமத்தில்) இருந்தாலன்றி செயலில் இறங்காது.
அப்படியிருக்கும்போது சபை தலைவரான கிறிஸ்து சொல்லாதிருந்தும்;
வேதத்தில் இல்லாத போதனைகளையும்,
கட்டளைகளையும்,
முறைமைகளையும்;
நாடக நடிகர்கள் அல்லது குடுகுடுப்பைக்காரர்களைப் போலுள்ளவர்களின் பேச்சுத் திறனாலும் வாய் ஜாலங்களினாலும் வசப்படுத்தப்பட்டு அவற்றை சரீரமாகிய சபை என்று சொல்லிக்கொண்டுள்ளவர்கள் கடைபிடிக்கிறார்களென்றால் - அந்த சரீரம் (சபை) கிறிஸ்துவை அல்ல – மாறாக போலியான தலையைக் கொண்டுள்ளது என்பதில் எந்த ஐயமுமில்லை !
வேதாகம கிறிஸ்தவர்கள் பின்பற்றின சிலவற்றை கீழே பட்டியலிடுகிறேன். இன்று பிரபலமாக நடைமுறையில் இருக்கும் பழக்கவழக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கவும்:
-வாரந்தோறும் கர்த்தரின் மரணத்தை நினைவுக்கூர்ந்தார்கள். அப். 20:7
-தேவனைத் துதித்துப் பாடுவதற்கு இசைக்கருவிகளின் உதவியை வேதாகம கிறிஸ்தவர்கள் நாடவில்லை; கொலோ. 3:16
-சனிக்கிழமைகளில் யூதர்களுக்கு சுவிசேஷம் சொல்லச் சென்றாலும், வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் அல்லாமல் வாரத்தின் முதல்நாளில் தேவனைத் தொழுதுக்கொள்ளும்படி கூடினார்கள். அப். 20:7, 1கொரி. 16:2
-சபை கூடுகையில் அனைவரும் புரிந்துக்கொள்ளும் பாஷைகளில் பேசினார்கள். புரியாத பாஷையில் எவராவது பேசுவதென்றால் அதனை மொழிப்பெயர்த்தார்கள். பேசும் மொழியை மற்றவருக்கு புரியும்படி மொழிபெயர்க்கப்படாத பட்சத்தில் அந்நியபாஷையில் சபையில் பேச அனுமதியில்லை. ஒரு நேரத்தில் ஒருவர் தான் அந்நிய பாஷையில் பேச அனுமதி. சந்தை வியாபாரம் போல மொத்தமாக கூச்சலிட சபையில் அனுமதியில்லை. 1கொரி. 14: 27-28
-தங்கள் இஷ்டத்திற்கு சபையின் பெயரை எவரும் வைக்கவில்லை. தாங்கள் கூடும் இடத்தின் பெயராலேயே சபை அழைக்கப்பட்டது.
-சபையின் தலைவர், நிறுவனர், ஃபௌன்டர் எல்லாம் கிறிஸ்து தான். அந்த சபை 33ம் கி.பி யில் துவங்கப்பட்டதாயிருந்தது.
-நியாயபிரமாணத்தை கிறிஸதவர்கள் கடைபிடிக்கவில்லை. அதை கடைபிடித்தால் தங்களுக்கு சாபம் வரும் என்று அறிந்து பயந்திருந்தார்கள். கலா. 3:10
-சபையில் ஆண்கள் மத்தியில் பெண்கள் / ஸ்திரீகள் போதிக்க அனுமதிக்கப்படவில்லை. 1கொரி. 14:34-35
-தேவனைத் தவிர எந்த மனிதரையும் அவர்கள் வணங்கவும் இல்லை. சிபாரிசுக்கென்று எவரிடமும் போய் கெஞ்சி நிற்கவில்லை. இயேசுவின் தாய் மரியாளிடம் ஏற்கனவே ஒருமுறை சிபாரிசுக்கு போனபோது *இயேசு சொல்வதன்படி செய்யுங்கள்* என்று மரியாள் சொன்னது இவர்களுக்கு நினைவில் இருந்தது போலும்! யோ. 2:5
இப்படி பிரபலமான சிலவற்றை மேலே பட்டியலிட்டிருக்கிறேன். உங்களது கூடுகை எப்படி என்பதை அறிந்து தங்கள் தங்கள் ஆத்துமாக்களை பாதுகாத்துக்கொள்ளவும். முறையானவற்றிற்குத் தாமதமின்றி திரும்புங்கள்.
ஐசுவரியவான் போல சம்பிரமமாய் ஊர் மெச்சும்படி வாழ்ந்தாலும், லாசருவைக் காட்டிலும் கம்பீரமாக அடக்கம் செய்யப்பட்டாலும்; மரணத்திற்கு பின்னர் தேவதூதர்கள் கொண்டு விடும் இடம் தான் நமக்கு முக்கியம். லூக்கா 16:22
ஆகவே இன்றாகிலும் வேதத்திற்கு செவிசாய்த்து உண்மைக்கு திரும்புவது அவசியம்.
நாமோ ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறோம் என்று வேதம் சொல்லுவதை (1பேதுரு 2:5) நாம் எப்போதும் நினைவில் கொள்வோம்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
கிறிஸ்தவ திருமணப் பதிவாளர் (அரசாங்க பதிவு உட்பட)
ஆசிரியர் - கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/JPiQF3ZnKZK70lUgamZ0dL
இப்பதிவின் YouTube லிங்க்:
வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக