#1135 - *யூதாஸ் நான்றுக் கொண்டு செத்தாரா அல்லது வயிறு வெடித்து செத்தாரா?* மத்தேயு 27:5ல் நான்றுக் கொண்டு செத்தார் என்றுள்ளது. அப். 1:18ல் தலைகீழாக விழுந்து வயிறு வெடித்து இறந்தார் என்றுள்ளது? இந்த முரண்பாட்டை விளக்கவும்.
*பதில்* : தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தில் முரண்பாடே இல்லை என்பதை என்று அறிந்தால்; இவ்விரு வசனங்களுக்குமான அர்த்தத்தை நாம் இன்னும் அறியவேண்டியுள்ளது என்பது தெளிவாகிறது.
*முதலாவது:*
மத்தேயு எழுதிய வரிகள் கிறிஸ்து சிலுவையில் அறைந்துக்கொண்டிருக்கும் கால சூழ்நிலையைக் கொண்டுள்ளது. அதாவது அந்த நாளில் நடந்த சம்பவத்தை எழுதிக்கொண்டுவரும் வேளையில் தானே யூதாஸின் நிலைப்பாட்டை எழுதுகிறார்.
*வசனங்களை கவனிக்கவும்:*
மத். 27:1-5 விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். *அப்பொழுது*, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
*இரண்டாவது*
லூக்கா எழுதிக்கொண்டு வருகிற அப்போஸ்தலருடைய நடபடிகளின் நிருபத்தின் நிகழ்வுகளின் துவக்கமோ கிறிஸ்து உயிர்த்தெழுந்து 40வது நாளிற்கு பின்னர் மேல்வீட்டறையில் அப்போஸ்தலர்களும் இயேசுவின் தாயாகிய மரியாளுமாக சுமார் 120பேர் கூடியிருந்த சம்பவத்தில் பேதுரு பேசினதை லூக்கா குறிப்பிடுகிறார். அப். 1:1-19
*அப்படியென்றால் இந்த இரண்டு சம்பவங்கள் ஏன்?*
இயேசு சிலுவையில் அறையப்பட்ட சூழ்நிலை நாளானது யூதர்களின் பெரிய பண்டிகையான பஸ்கா துவங்கப்போகிற கடைசி நிமிடத்துளிகள். அவசர அவசரமாக சரீரத்தை இறக்கி அடக்கம் செய்யவேண்டும் என்ற முனைப்பு ஒருபக்கம் நடக்கிறது. யோ. 19:31
கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதால் தேசமே அலங்கோலமாயிருந்தது. மத். 27:24
பூமியதிர்ச்சி வந்ததால் அனைவரும் பயந்திருந்தார்கள். மத். 27:54
தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழாக கிழிந்துவிட்டது. மத். 27:51
கன்மலைகள் பிளந்தது. மத். 27:51
பூமியெங்கும் இருள் சூழ்திருந்தது. மத். 27:45
ஜனங்கள் அந்நாளில் உறைந்திருந்தார்கள் என்றே சொல்லமுடியும்.
இது ஒருபுறம் இருக்க, மற்ற புறத்தில் குற்றமில்லாத இரத்தத்தை அதாவது குற்றமில்லாதவரை தண்டிப்பதற்கு நானே காரணமாகிவிட்டேனே என்று யூதாஸ் மிகுந்த துக்கமடைந்து நான்று கொண்டான். மத். 27:3-5
பஸ்கா துவங்கிவிட்டது. அவரவர்கள் தாங்கள் அனுசரிக்கவேண்டியதை அனுசரிக்கிறார்கள். அதிலேயே அவர்களது முழு கவனமும் இருந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.
மேலும் நியாயபிரமாணத்தின்படி மரித்த சரீரத்திற்கு அருகாமையில் யார் சென்றாலும் அவர்கள் ஏழு நாளுக்கு தீட்டுள்ளவராகிறார்கள். ஆகவே எந்த பிணத்திற்கு அருகாமையும் எவரும் போயிருக்க வாய்ப்பு இல்லை. பிரேதத்தை தொடுகிறவன் பஸ்காவை ஆசரிக்க முடியாது. எண். 9:6; 5:2; 6:6-7; 19:11; 19:16
பஸ்கா அனுசரிப்பு முடிந்த பின்னர் (சுமார் நான்கு நாட்களுக்கு பின்னர்) நான்று கொண்டு மரித்த யூதாஸின் சரீரம் வீங்கி கணத்து கயிறு அறுந்து பிய்த்துக் கொண்டு கீழே விழுந்த சரீரம் உப்பி வீங்கியிருந்த வயிறு வெடித்ததை லூக்கா (மருத்துவரானதால்) விபரமாக எழுதியிருக்கிறார். வயிறு வெடித்து செத்தான் என்று எழுதப்பட்டிராததை கவனிக்கவேண்டும்!
*கூடுதல் தகவலாக-யூதாஸின் செயல்களில் எனது சொந்த அநுமானம்*:
1-இயேசுவை இராஜாவாக்கலாம் என்று அவரைப் பிடிக்க முயன்ற போது அவர்கள் கண்களிலிருந்து விலகிவிட்டார். யோ. 6:15
2-தான் ஆபிரகாம் காலத்திலேயே இருந்ததாக சொன்னபோது, அவரை கல்லெறிய முயன்றனர். அவர்கள் கண்களிலதிருந்து இயேசு மறைந்து விட்டார். யோ. 8:56-59
3-கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் என்ற வசனத்தை வாசித்த பின்னர் தனது சொந்த ஊரில் ஜெபஆலயத்திலுள்ளவர்களுடன் நடந்த சம்பாஷனையின் போது இயேசுவை செங்குத்தான மலையிலிருந்து தலைகீழாக தள்ளிவிடும்படி முயன்றனர். அவர் கடந்து போய் விட்டார். லூக்கா 4:18-30
4-நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொன்ன போது மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள். அவர்களுக்கு இயேசு தப்பிச் சென்றுக் கொண்டிருந்தார். யோ. 6:30-40
இப்படி ஒவ்வொரு முறையும் இயேசுவை பிடிக்க முற்பட்டபோது அவரோ தப்பினார்.
யூதாஸ் பணத்தில் குறியுள்ளவன். திருடன் என்று வேதம் சொல்கிறது. யோ. 12:5-6
பணத்திற்கு பணம் லாபம் என்று நினைத்து 30 வெள்ளிக்காசுக்கு பேரம் பேசினான் யூதாஸ். எப்படியாயினும் அவர் தப்பிவிடுவார். நமக்கு பணம் லாபம் என்று நினைத்திருக்கலாம். (எனது அனுமானமே)
ஆனால், மரண ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டு விட்டார் என்பதையறிந்த பின்னர் ஐயோ நான் மோசம் போனேனே என்பதை உணர்ந்தான். மத். 27:3
காசு வேண்டாம் அவரை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சிப் பார்க்கிறார். மத். 27:3-4
காலம் கடந்துவிட்டதை நினைத்து மனம்வருந்த காசை தேவாலயத்தில் எறிந்துவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டான். மத். 27:4-5
எப்படியாயினும், யூதாஸின் மரணத்தைக் குறித்து சொல்லப்பட்ட இந்த இரண்டு வசனங்களிலும் முரண்பாடு இல்லை என்பது தெளிவு.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக