ஞாயிறு, 14 மார்ச், 2021

#1083 - இறந்து போன நகோமியின் மகன் மக்லோனின் பெயரை வைக்காமல், ஓபேத் என்ற பெயரை போவாஸ் தன் மகனுக்கு வைத்தது லேவி. 25:5-6ன்படி சரியானதா?

#1083 - *இறந்து போன நகோமியின் மகன் மக்லோனின் பெயரை வைக்காமல், ஓபேத் என்ற பெயரை போவாஸ் தன் மகனுக்கு வைத்தது லேவி. 25:5-6ன்படி சரியானதா*? (மத். 1:5)

*பதில்* : புத்திர சந்தானம் இல்லாமல் ஒரு சகோதரன் இறந்தால், அவனுடைய அந்த விதவை மனைவியை வேறொரு சகோதரன் திருமணம் செய்து, இறந்து போனவனுக்கு ஈடாக சந்தானம் வைக்க பிள்ளை பெறவேண்டும் என்ற முறை, நியாயபிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னமே இருந்தது. (ஆதி. 38:8)

மோசேயின் மூலம் இது வலியுறுத்தப்படுவதை உபாகமம் 25:5-6ல் காண்கிறோம். “சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.”

முதலாம் அதிகாரத்தில், நகோமி தனது மருமகள்களான ரூத் மற்றும் ஓர்பாவைத் மறுமணம் செய்யும்படித் தூண்டுவதாக அறிகிறோம்.

ரூத் 1:11 அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ?

ரூத் 1:12 என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும்,

ரூத் 1:13 அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; … … என்ற வசனங்கள் மூலம் இந்த கருத்தை அறிகிறோம்.

நான்காம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள்:
போவாஸைக் காட்டிலும், நெருங்கிய உறவினன், ரூத்தை மறுமணம் செய்ய ஏற்காததால், அதனைத் தொடர்ந்து போவாஸ் கூறுவது,
ரூத் 4:10 இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான்.

மேலும், உபாகமம் 25ஆம் அதிகாரத்தின் முறைப்படி ரூத் மற்றும் போவாஸின் திருமணம், சட்டத்தால் கட்டாயப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

ஏனென்றால், ஒருபுறத்தில் ரூத்தின் மைத்துனர் உறவில் போவாஸ் இருந்ததும் அல்ல, இவ்விருவருக்கும் பிறந்த மகன் (ஓபேத்) ரூத்தின் மகனாக கணக்கிடப்படவும் இல்லை என்பதும் நாம் அறியவேண்டியுள்ளது.

*வசனங்களை கவனிக்கவும்* :
ரூத் 4:13 போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.

ரூத் 4:14 அப்பொழுது ஸ்திரீகள் *நகோமியைப் பார்த்து*: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று *உனக்குத்* தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.

ரூத் 4:15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.

ரூத் 4:16 *நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்*.

ரூத் 4:17 அயல்வீட்டுக்காரிகள் *நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது* என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.

போவாஸ் வாங்கின இந்த செயல் லேவி. 25:25-26ல் காட்டப்பட்ட சொத்துக்கான மீட்பின் செயல்முறையை ஒத்திருக்கின்றன.

ஒரு தரித்திரப்பட்ட உறவினர் விற்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த காணியாட்சியை வாங்குகிறார்கள். இருப்பினும், லேவியர்களில் ஒரு உறவினரின் சொத்தை மீட்பது எந்த வகையிலும் உறவினரின் விதவையுடனான திருமணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை.

ரூத் தன் மாமியாருடன் இருக்க எடுத்த தீர்மானமானது, அடிப்படையில் நகோமிக்கு ஒரு மருமகளை விட அதிகமான நெருக்கத்தை உணர்த்தியது. (ரூத் 1:16-17).

நகோமி, ரூத்தை தன் மகள் என்று குறிப்பிடுகிறார் (ரூத் 2:22; 3:1, 18). அக்கம்பக்கத்தினர் கூட அவர்கள் இருவரது நெருங்கிய உறவை உணர்ந்தனர். (ரூத் 4:15).

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே இறந்த ஒரு மனிதனின் விதவையாக இருந்தாள் ரூத்.

போவாஸ் மற்றும் ரூத்தின் திருமணத்திற்கு பின்னர், ரூத்தின் இறந்த கணவருக்கு ஒரு வாரிசை நகோமி வளர்ப்பதால், அந்த முதல் குழந்தை தனது கணவரின் குழந்தையாகவும், அவருடைய வாரிசாகவும் கருதினார்கள்.

நகோமிக்கு உள்ள நிலங்கள் இறந்த கணவர் எலிமலேக்கிற்கு சொந்தமானது. நகோமி அதை விற்றாள் (ரூத் 4: 3). உரிமையில் நெருங்கிய உறவினன் அதை வாங்கவில்லை. (ரூத் 2:20, 3:12, 4:1-6)

இரண்டாம் சுதந்திரவாளியும் உறவினனுமான போவாஸ் லேவி. 25:25ன்படி நிலத்தை மீட்டு, ரூத்துக்கு கணவனாகிறார்.

லேவி 25ன்படியான நில மீட்பு மற்றும் உபா. 25ன் படியான திருமணம் செய்தல் என்ற 2 விஷயங்கள் ஒரே நேரத்தில் இங்கு நடக்கின்றன. அவை தொடர்புடையவை என்றாலும், தனி தனி ஒப்பந்தங்கள்.

போவாஸ் & ரூத்தின் மகன் ஓபேத், தன் தகப்பனான போவாஸ் மீட்டுக்கொண்ட பாட்டி நகோமி விற்ற நிலத்தை பெறுவார்.

ஆனால் சரித்திரமோ, போவாஸின் மகனாக ஓபேத்தையே பட்டியலிடும், எலிமலேக்கையோ, மக்லோனையோ அல்ல.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஓபேத் போவாஸின் மகன், ஆனால் மக்லோனின் தேசத்தை/சொத்தை வாரிசாகக் கொண்டான்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக