சனி, 23 ஜனவரி, 2021

#1069- இரட்சிக்கப்பட்டவர்கள் தங்கள் இரட்சிப்பை ஒருபோதும் இழக்கமாட்டார்கள் என்கிற ஒரு போதனை வருகிறது. இதற்கு ஆதாரமாக 1கொரி.5:5, நீதி. 11: 31 காண்பிக்கப்படுகிறது. விளக்கவும்.

#1069- *இரட்சிக்கப்பட்டவர்கள் தங்கள் இரட்சிப்பை  ஒருபோதும் இழக்கமாட்டார்கள் என்கிற ஒரு போதனை வருகிறது. இதற்கு ஆதாரமாக 1கொரி. 5:5, நீதி. 11: 31 காண்பிக்கப்படுகிறது. விளக்கவும்.*

*பதில்* : இப்படிப்பட்ட நம்பிக்கை பல கிறிஸ்தவ மதத்தினரிடையே உள்ளது உண்மை. பிரச்சனை என்னவென்றால், கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்ட அநேகர் தவறி மாற்றுப்பாதையில் சென்றதை நாம் அறிந்திருக்கிறோம்.

அதிபயங்கரமாக ஊழியம் செய்தவர்களும், பிற்காலங்களில் தாங்களே கடவுள் என்று சொல்ல துவங்கி, பின்னர் விக்கிரகத்திறகு தலைவணங்கினவர்களும் நம் காலத்திலேயே கண்டோம்.  

நீங்கள் குறிப்பிட்ட இந்த கோட்பாடு பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

கீழ்வரும் இரண்டு கேள்விகள் இந்த கோட்பாட்டை சவாலுக்குட்படுத்துகிறது.

பாவமான, மனந்திரும்பாத வாழ்க்கை முறையில் வாழும் கிறிஸ்தவர்களை என்ன சொல்வது?

தாங்கள் விரும்பியதும், ஜெபித்தும், வேண்டியதும் நிறைவேறவில்லையென்றவுடன் சபை கூடுதலை விட்டு முடங்கி, விசுவாசத்தை நிராகரித்து கிறிஸ்துவை மறுக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி என்ன சொல்வது?

"கிறிஸ்தவர்" மீண்டும் பிறந்தவர்கள். ஒரு உண்மையான கிறிஸ்தவர் தொடர்ச்சியான, மனந்திரும்பாத பாவத்தின் நிலையில் வாழ மாட்டார் என்று வேதம் அறிவிக்கிறது. “1 யோ. 3:6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை”.

விசுவாசத்தை விட்டு விலகும் எவரும் கிறிஸ்தவர் அல்ல என்று வேதம் கூறுகிறது (1 யோவான் 2:19 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள்.)

எத்தனை பெரிய ஊழியராகவோ, ஆராதனை வீரனாகவோ இருந்திருக்கலாம்,  ஆனால் உண்மையில் இரட்சிப்படையாதவர். "அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; " (மத்தேயு 7:16). மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே எழுப்பப்படாதவர்கள். (ரோமர் 7: 4).

மேலும், இவர்கள் காண்பிக்கும் ஆதாரம் யோவான் 3:18, “அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று.” என்கிற வசனங்கள்.

*இந்த வாதத்திற்கு நாம் என்ன சொல்ல வேண்டும்?*
தேவன் மீது தனது தீவிர நம்பிக்கையைத் தொடரும் வரை எவரும் தீர்ப்பின் தண்டனைக்கு உட்படுவதில்லை.

ஒரு விசுவாசி தனிப்பட்ட பாவத்தின் காரணமாக தனது ஆன்மாவை இழக்க நேரிடும் என்பதற்கு தெளிவான சாட்சியம் வேதாகமத்தில் உள்ளது.

கொரிந்திய சபையில் உள்ள ஒரு சகோதரை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.  அவர் தனது தந்தையின் மனைவியுடன் விபச்சாரத்தில் வாழ்ந்து வந்தார் (1 கொரிந்தியர் 5:1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே).

இந்த வழிகெட்ட மனிதனை பவுல் "நியாயந்தீர்த்தார்" என்று கூறுகிறார் (வச. 3-5).

மேலும், கொரிந்திய பரிசுத்தவான்களிடம் “இப்படிப்பட்ட பொல்லாதவனை உங்களிடமிருந்து தள்ளிப்போடுங்கள் என்கிறார்” (வச. 13).

இது சபை ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கான கட்டளையாக இருந்தது. அவர்கள் குற்றவாளியை தங்கள் கூட்டுறவிலிருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் உள்ளது.

கர்த்தருடைய வருகைக்கு முன்னர் எப்படியாகிலும் இந்த சகோதரர் மனந்திரும்பி இரட்சிக்கப்படும்படி இந்த நடவடிக்கையானது அவருக்கு உதவவேண்டும் என்பதால். (1கொரி. 5:5, 2 தெசலோனிக்கேயர் 3: 6,14-15).

இதன் உட்பொருள் மிகவும் தெளிவானது. விபச்சாரம் செய்பவர் (சத்தியத்தை விட்டு வழிமாறினவர்) தனது தீமையைக் கைவிடவில்லை என்றால், அவர் கர்த்தருடைய நாளில் இரட்சிக்கப்பட மாட்டார்.

இப்படிப்பட்ட வழி தவறினவர்கள் தாங்கள் மனந்திரும்பும் வரை, சபை கூட்டுறவுக்கு தகுதியற்றவர் என்பதை நாம் இதன் நிமித்தம் அறிகிறோம்.

ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.  எபிரேயர் 4:1

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக