சனி, 31 அக்டோபர், 2020

#1030 - தேவனுடைய நியாயப்பிரமாணமும் மோசேயின் நியாயபிரமாணமும் ஒன்றா அல்லது வெவ்வேறானதா?

#1030 -  *தேவனுடைய நியாயப்பிரமாணமும் மோசேயின் நியாயபிரமாணமும் ஒன்றா அல்லது வெவ்வேறானதா?* தானியேல் 9:11-இல் இஸ்ரவேலர் எல்லாரும் *உமது நியாயப்பிரமாணத்தை* மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய *மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில்* எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன.

*பதில்* : ஓய்வு நாள் (ஏழாம் நாள்) தொழுகைக்காரர்கள் இந்த வசனத்தை தங்கள் நடக்கைக்கு ஆதாரமாக கோடிட்டு காண்பிப்பார்கள்.

எவ்வளவு தான் வசனங்களை நியாயமாக காண்பித்தாலும், கேட்காத நபர்கள் எப்போதும் இருப்பார்கள்.

"தேவனுடைய நியாயப்பிரமாணம்" மற்றும் " மோசேயின் நியாயப்பிரமாணம் அல்லது உடன்படிக்கை" என்ற இந்த இரண்டும் வெவ்வேறு விஷயங்கள் அல்லது இரண்டும் சமமானது என்று வேதாகமம் கருதுகிறதா?

எப்படியாக "மேசியா," "இயேசு", "தேவகுமாரன்" என்ற சொற்கள் அனைத்தும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டிருந்தாலும், அனைத்தும் ஒரே நபரைக் குறிக்கிறதோ, வார்த்தைகளில் வித்தியாசம் இருப்பதால் வித்தியாசமான நபரைக் குறிப்பதாக கருதிவிட முடியாது.

அதுபோலவே, மோசேயின் சட்டத்தை விவரிக்க கடவுள் பல்வேறு சொற்களைப் பயன்படுத்துகிறார். சங்கீதம் 19-ன் இந்த பகுதியைக் கவனியுங்கள்:

சங்கீதம் 19:7-9
(1)கர்த்தருடைய *வேதம்* குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது;
(2)கர்த்தருடைய *சாட்சி* முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.
(3)கர்த்தருடைய *நியாயங்கள்* செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறவையுமாய் இருக்கிறது;
(4)கர்த்தருடைய *கற்பனை* தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாய் இருக்கிறது.
(5)கர்த்தருக்குப் பயப்படுகிற *பயம்* சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது;
(6)கர்த்தருடைய *நியாயங்கள்* உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாய் இருக்கின்றன.

ஆங்கிலத்தில் :
The *law* of the LORD is perfect, restoring the soul;
The *testimony* of the LORD is sure, making wise the simple.
The *precepts* of the LORD are right, rejoicing the heart;
The *commandment* of the LORD is pure, enlightening the eyes.
The *fear* of the LORD is clean, enduring forever;
The *judgments* of the LORD are true; they are righteous altogether.
(Psalms 19:7-9)

வசனத்தை கவனியுங்கள்.
இங்கு தாவீது ஆறு வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசுகிறாரா அல்லது ஆறு வெவ்வேறு வழிகளில் விவரிக்கப்பட்டுள்ளதா?

வெவ்வேறு விஷயங்களையல்ல, வெவ்வேறு வகைகளில் விவரித்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

வேதம், சாட்சி, நியாயங்கள், கற்பனை, பயம், நியாயங்கள் (கட்டளைகள்) அனைத்தும் ஒரே எழுதப்பட்ட ஆவணத்தைக் குறிக்கின்றன.

மோசேயின் உடன்படிக்கை மாறிவிட்டது என்றும் தேவனுடைய நியாயப்பிரமாணம் இன்னும் நடைமுறையில் உள்ளது என்றும் சொல்வதா?

மோசே சொன்னதைக் கவனியுங்கள், "நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட *பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை* அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய *கட்டளைகளையும் நியாயங்களையும்* உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்தில் கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார்." உபாகமம் 4: 13-14.

*பத்து கட்டளைகளை*, மோசே *தேவனுடைய உடன்படிக்கை* என்று குறிப்பிடுகிறார்.

சங்கீதம் 78:10-11 ஐக் கவனியுங்கள், "அவர்கள் *தேவனுடைய உடன்படிக்கையைக்* கைக்கொள்ளாமலும், *அவருடைய கட்டளைகளின்படி* நடக்கச் சம்மதியாமலும், அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்." இரண்டு இணையான வாக்கியத்தின்படி "தேவனுடைய உடன்படிக்கை" மற்றும் "அவருடைய சட்டம்" ஆகியவை ஒன்றையேக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த உடன்படிக்கையானது ஒரு நாள் மாறும் என்று  எரேமியா தீர்க்கதரிசி உரைத்தார். "இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் *புது உடன்படிக்கைபண்ணுவேன்*. நான் அவர்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்தநாளிலே அவர்களோடே பண்ணின *உடன்படிக்கையின்படி* அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் *உடன்படிக்கையை* அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே *பண்ணப்போகிற உடன்படிக்கையாவது*; நான் *என் நியாயப்பிரமாணத்தை* அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” எரேமியா 31: 31-33.

விதிமுறைகளின் மாற்றத்தைக் கவனியுங்கள். கடவுள் தம் மக்களுக்கு ஒரு புதிய உடன்படிக்கையை அளிப்பார் என்றும் அவருடைய சட்டத்தை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவார் என்றும் தெளிவாய் வேதம் சொல்லியிருக்கிறது.

எபிரேயரின் எழுத்தாளர் அதே சொற்களை எழுதுவதைக் கவனியுங்கள்.

எபி. 7:18-19 முந்தின *கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை*, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம்.

எபி. 8:6-7 இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட *விசேஷித்த உடன்படிக்கைக்கு* எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த *முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு* இடம் தேடவேண்டுவதில்லையே.

எபி 8:13 *புது உடன்படிக்கை* என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது *உருவழிந்துபோகக்* காலம் சமீபித்திருக்கிறது.  

எபி. 9:15-20 ஆகையால் *முதலாம் உடன்படிக்கையின்* காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, *புது உடன்படிக்கையின்* மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்த சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. *அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை*. எப்படியெனில், *மோசே, நியாயப்பிரமாணத்தின்படி*, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: தேவன் *உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின்* இரத்தம் இதுவே என்று சொன்னான்.

உடன்படிக்கை, ஏற்பாடு, சட்டம், கட்டளை மற்றும் நியாயப்பிரமாணம் அனைத்தும் ஒரே விஷயத்தைக் குறிக்கின்றன.

இந்த வசனங்கள் நியாயப்பிரமாணத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாகக் கூறுகிறது, ஏனெனில் நியாயப்பிரமாணம் மனிதகுலத்தை காப்பாற்ற முடியவில்லை.

எனவே *இரண்டாவது சட்டம் நிறுவப்படுவதற்காக முதல் சட்டம் நீக்கப்பட்டது*.

ரோமானிய மொழியில் பவுல் கூறிய அதே கருத்தும் இதுதான் (மேலும் "சட்டம்" என்ற வார்த்தையை பவுல் பயன்படுத்துவதை கவனிக்கவும்).

"அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே *நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்*. நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் *நியாயப்பிரமாணத்தினாலே* தோன்றிய பாவ இச்சைகள் *மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக* நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. இப்பொழுதோ நாம் *பழமையான எழுத்தின்படியல்ல*, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் *கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி*, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே, பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே."(ரோமர் 7: 4-8).

மோசே, *பத்து கட்டளைகளை கடவுளின் உடன்படிக்கை* என்று குறிப்பிட்டார் என்பதை நினைவில் வையுங்கள்.

இங்கே, பவுல், நியாயப்பிரமாணம் நீக்கப்படுவது பற்றி விவாதிப்பதை கவனியுங்கள்.

அதே விஷயம் எபேசியர் புத்தகத்திலும் கூறப்பட்டுள்ளது, "ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், *வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும்*, நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, *பகையாக* நின்ற *பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து*, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, *இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று*, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர் மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து,  அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டு வருகிறீர்கள்." (எபேசியர் 2: 11-20).

இயேசு சொன்னது எவ்வளவு உண்மை என்பதை கவனியுங்கள், "*நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும்* அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், *நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும்*, அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."(மத்தேயு 5: 17-18).

சட்டம் ஒருபோதும் முடிவடையாது என்று இயேசு கூறவில்லை. அது நிறைவேறும் வரை அது முடிவடையாது என்று அவர் உறுதியளித்தார். லூக்கா 24: 44-ல் தன் சீஷர்களிடம் சொல்வதை கவனியுங்கள், "அவர்களை நோக்கி: *மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று*, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார்."

இயேசு சிலுவையில் மரித்ததற்குக் காரணம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதாகும். இதை கிறிஸ்து செய்தார்.

"விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்." (ரோமர் 10: 4).

நியாயபிரமாணத்தின் குறிக்கோளே இயேசு தான்.
நியாயபிரமாணத்தின் நோக்கம் கிறிஸ்துவே.
அவர் அனைத்து சட்டங்களையும் நிறைவேற்றினார். ஆகவே, அதை நிறைவேற்றி முடிவுற்று ஒரு புதிய சட்டத்தை உடன்படிக்கையை பிரமாணத்தை நிறுவினார்.

மேலே கூறியவைகள் போதுமானதென்று கருதுகிறேன். சொந்த கொள்கையே முக்கியம் என்பவர்களுக்கு எத்தனை வேத வசனத்தைக் காண்பித்தாலும் கண் திறப்பது மிகக்கடினம்.
எந்த வகையிலும் நியாயப்பிரமாணம் வேண்டும், நடைமுறையில் உள்ளது என்று வாதாடுபவர்களும், கடைபிடிக்க நினைப்பவர்களும் சபிக்கப்படுவார்கள் என்று ”*வேதம் மிகத் தெளிவாக சொல்வதையாவது*” உங்கள் வேதாகமத்திலேயே படித்து மனந்திரும்புவீர்கள் என்று ஏங்குகிறேன். கலா. 3:10, எசே. 27:26, ரோ. 3:19-20, யாக். 2:9-11

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229

*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக