ஞாயிறு, 23 நவம்பர், 2025

#1227 - பெந்தெகோஸ்தே சபையினரை போன்று கிறிஸ்துவின் சபையிலும், மூன்று அல்லது ஐந்து இடங்களில் ஒரு ஊழியர் வாரத்தின் முதல் நாளில் ஊழியம் செய்கிறார்களே. அது தவறு இல்லையா?

#1227 - *பெந்தெகோஸ்தே சபையினரை போன்று கிறிஸ்துவின் சபையிலும், மூன்று அல்லது ஐந்து இடங்களில் ஒரு ஊழியர் வாரத்தின் முதல் நாளில் ஊழியம் செய்கிறார்களே. அது தவறு இல்லையா?*
 
*பதில்* : கிறிஸ்துவினுடைய சபை தன்னாட்சியானது. எந்த பிராந்திய சபையும் மற்ற பிராந்திய சபைக்கு கீழானது அல்ல.
 
ஒவ்வொரு பிராந்திய சபையின் நிர்வாகமானது “ஊழியர்களின்” கையில் அல்ல மாறாக அது அந்த பிராந்திய சபையின் மூப்பர்களிடம் உள்ளது. அப். 14:23, தீத்து 1:5
 
அப்படிப்பட்ட மூப்பர்களின் அதிகாரம் அவர்கள் மேய்க்கும் அல்லது நிர்வகிக்கும் பிராந்திய சபைக்கு மட்டுமேயானது. அப். 20:28, 1 பேதுரு 5:2
 
ஒவ்வொரு பிராந்திய சபையும் தங்கள் செயல்களில் சுயமாக முடிவு செய்தது. 2 கொரி. 8:1–5, 8:19
 
எருசலேமிலுள்ள சபையானது மற்ற பிராந்திய சபைகளைக் கட்டுப்படுத்தவில்லை. அப். 11:27–30. ஒரு மத்திய தலைமையகமாய் எந்த சபையும் செயல்படவில்லை என்பதை அறிவது அவசியம்.
 
மேலும், சபையில் ஒற்றை தலைமைக்கு வேதத்தில் இடமில்லை !!
 
மூப்பர்கள், அல்லது கண்காணிகள் அல்லது பாஸ்டர்கள் என்று பன்மையிலேயே வேதாகமத்தில் காண்கிறோம். அப்படிப்பட்டவர்கள்:
1- வயதானவராக இருக்க வேண்டும்
2- ஆணாக இருக்க வேண்டும்
3- திருமணமானவராக இருக்க வேண்டும்
4- சொந்த பிள்ளைகள் பெற்றிருக்க வேண்டும் – அவர்கள் தேவனுக்குள் இருக்க வேண்டும். பிள்ளை இல்லாதவர்கள் – மூப்பராகவோ பாஸ்டராகவோ கண்காணியாகவோ இருக்க வேதம் அனுமதிக்கவில்லை.
5- புதிய கிறிஸ்தவராகவும் இருக்கக்கூடாது

தீத்து 1:5-9
 
மேலும் அப்படிப்பட்டவர்கள் கீழ்கண்டவற்றில் தேறியிருக்க வேண்டும்:
- சபையை மேய்க்கும் அனுபவம் (அப். 20:28)
- போதிக்க அறிந்திருக்க வேண்டும் (1தீமோ. 3:2)
- முன் உதாரணமாக இருக்கவேண்டும் (எபி. 13:7)
- ஆத்துமாக்களை கவனிக்க வேண்டும் (எபி. 13:17)
- தவறான போதனையை கண்டிக்க தெரிந்திருக்க வேண்டும் (தீத்து 1:9)
 
*இப்படிப்பட்ட மூப்பர்/கண்காணி/பாஸ்டர் பொறுப்பில் – பெண்களுக்கு இடமில்லை*.
 

அனைவரும் சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும். மத். 23:8
பாஸ்டர், பிஷப், கண்காணி என்பதெல்லாம் வேலையின் பெயர். 
 
பாஸ்டர் என்பதும் பிஷப் என்பதும் கண்காணி என்பதுமான பதங்கள் அனைத்தும் ஒரே பதத்தையே குறிக்கிறது. பிஷப் ஒரு நபர் பாஸ்டர் இன்னொரு நபர் என்பதல்ல! 

அப்போஸ்தலர் 20:17, 28-ல், பவுல் எபேசு சபையின் மூப்பர்களை (பிரஸ்புடெரோஸ்) குறித்துப் பேசுகிறார், அவர்களை மந்தையை மேய்க்க வேண்டிய கண்காணிகள் (எபிஸ்கோபோஸ்) என்று குறிப்பிடுகிறார் (பொய்மைனோ).


தீத்து 1:5–7, பவுல் ஒவ்வொரு ஊரிலும் மூப்பர்களை நியமிக்க தீத்துவுக்கு அறிவுறுத்துவதைக் காட்டுகிறது, பின்னர் இந்தப் பணிக்கான தகுதிகளை விவரிக்கும் போது உடனடியாக கண்காணி என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்.


1 பேதுரு 5:1–2-ல், பேதுரு மூப்பர்களிடம் முறையிட்டு, கண்காணிகளாகச் செயல்படும் அதே வேளையில் தேவனுடைய மந்தையை மேய்க்கச் சொல்கிறார்.


இப்படிப்பட்ட எந்தப் பொறுப்புகளையும் பட்டங்களாய் வைத்துக்கொள்ளக் கூடாது!! சகோதரர் என்றே அழைக்கப்படவேண்டும்.

 
மருத்துவரை கவுரவமாக டாக்டர் என்று அழைத்து பழகிவிட்ட சமுதாயம்
குப்பை சுத்தம் செய்பவர் அல்லது முடி திருத்துபவர் என்று தங்கள் தொழிலை வைத்து அழைப்பதில்லையே !!
 
சபை நிர்வாகம் என்பது வசனத்தின்படி  ஊழியர்கள் கையில் அல்ல, மூப்பர்கள் கையில் உள்ளது!! எபி. 13:7, 17, 24, 1 தீமோ. 5:17, 1தெச. 5:12.
 
மூப்பர்கள் அனைவரும் சபை ஊழியர்களாக இருக்க முடியும். ஆனால், எல்லா ஊழியர்களும் மூப்பர்களாக இருக்கமுடியாது.
 
புதிய இடத்தில் ஒரு தொழுகையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஊழியர் நினைத்து அங்கே ஆத்துமாக்களை சேர்த்தால், கட்டாயம் விரைவில் அந்த இடத்திற்கு தனி ஒரு ஊழியரை நியமிக்க வேண்டும். அப்படி செய்யாமல், தானே அத்தனை பிராந்தியங்களையும் கையில் வைத்திருந்தால், அது தவறான செயல்.
 
தங்களின் இச்செயலிற்கு, 
பயணத்தினிமித்தம் பிலிப்புவையும் பவுலையும் கோடிட்டுக் காண்பிக்கலாம். 
 
சுவிசேஷகரான பிலிப்பு தனது ஆரம்ப நாட்களில் பயணம் செய்தார். ஆனால் அவர் செசரியாவை அடைந்தபோது அதை நிறுத்திவிட்டார் (அப். 8:40). சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு சுவிசேஷகரின் கடமைகளை முன்னெடுத்து வந்தார் (அப். 21:8) என்பதை அறியலாம்.
 
அப்போஸ்தலன் பவுலும் தொடர்ந்து வாரந்தோறும் பயணத்தில் காலத்தை செலவளிக்கவில்லை. அவர் கொரிந்துவில் 18 மாதங்கள் கழித்தார் (அப். 18:11). 
 
பின்னர் எபேசுவில், 3 ஆண்டுகள் (அப். 20:31). 
 
அப்போஸ்தலர் நிருபத்தை நாம் படிக்கும்பொழுது, ஒரு பகுதியில் தான் திறம்பட ஊழியம் செய்ததை உணரும் வரை பணியாற்றினார் என்பது தெளிவாகிறது. 
 
பல முறை அவர் ஒரு வேலையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதற்கு முன்பு அவர் நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போதும் கூட, அவர்களின் முன்னேற்றத்தைச் சரிபார்க்கவும், ஊக்கமளிக்கவும் செய்தார்.
 
ஒரு பகுதியில் போதுமான எண்ணிக்கையிலான பிரசங்கியாளர்கள் இல்லாததால் இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படலாம் என்றாலும், அது சிறந்ததல்ல. அது வேத அடிப்படையிலானதும் அல்ல. 
 
ஒரு சபையாரை போலவே, ஒரு பிரசங்கியாளரும் ஒரு உள்ளூர் சபையின் உறுப்பினராக இருக்க வேண்டும். 
 
பவுல் எருசலேமில் இருந்தபோது, அங்குள்ள சகோதரர்களுடன் சேர முயன்றார் (அப். 9:26). 
 
தன்னாட்சி பெறுவதற்குப் பதிலாக, பல பிராந்திய சபைகள் ஒரு பிரசங்கியாளரின் மேற்பார்வையின் கீழ் செயல்படத் தொடங்கும் பொழுது தேவன் அங்கீகரிக்காத சபைகளின் இணைப்பை உருவாக்குகின்றன.
 
பிரசங்கியாளர் உள்ளூர் சபையின் செயல்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளார். 
 
ஜனங்களை கர்த்தரிடம் கொண்டு வருவதற்கு மட்டுமல்லாமல், இரட்சிக்கப்பட்டவர்களை பலப்படுத்தவும் ஒரு பிரசங்கியாளர் உழைக்கிறார் (எபே. 4:11-13). 
 
தனக்கு படியளக்கும் வெளிநாட்டுக்காரனுக்கு கணக்கு காண்பிப்பதற்காகவோ, அல்லது வீட்டை விட்டு வெளியே வராத சோம்பேறிகள் வீட்டிற்கு இவர்களே ஒரு சிறிய கூட்டத்தை அவ்வீட்டிற்கு கூட்டிப் போய் ஒரு மினி ஆராதனையை நடத்தி தங்கள் பையை நிரப்பி சுய பக்தியை காண்பிக்கும் கள்ள அவலத்தை விட்டு உண்மையான ஊழியனாய் கர்த்தருக்குள் திரும்பவேண்டும்.
 
கிறிஸ்துவின் சபையார் என்று தங்களை அழைத்துக்கொண்டாலும், ஒவ்வொரு பிராந்திய சபைக்கும் தனிப்பட்ட நிர்வாகம் இருக்கவேண்டியது கட்டாயம். 
 
ஒரே ஊழியர் காலையில் ஒரிடத்திலும், பின்னர் இன்னொரு இடத்திலுமாக ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் நிரந்தரமாய் நடத்துவது வேதத்திற்கு முரணான செயல். அது வேதத்தின்படி தவறு. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய ஊழியன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்
ஆசிரியர், கணியாகுளம் வேதாகம பள்ளி,
தொடர்பு : +918144776229 (India) 

*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய*:
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*வலைதளம்* : kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக