சனி, 16 மே, 2020

#952 - ஆதியாகமம் 1ம் அதிகாரத்திலும் பின்னர் மறுபடியும் 2ம் அதிகாரத்திலும் ஏன் சிருஷ்டிப்பு இரண்டு முறை சொல்லப்பட்டுள்ளது?

#952 - *சிருஷ்டித்தாயிற்று என்ற பின்னர் உருவாக்கினார் என்று மீண்டும் ஏன் வருகிறது?*

ஆதியாகமம் 1:27=> தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.

ஆதியாகமம் 2:7=> தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

ஆதியாகமம் 2:22=> தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

1.(ஆதியாகமம் 1:23-27)
மனிதனின் ஐந்தாம் நாளில்  உருவாக்கினர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஏன் மீண்டும் இரண்டாம் அதிகாரத்தில் (ஆதியாகமம் 2:7)
இவ்வாறு கூறப்பட்டுள்ளது?

2. ஆதியாகமம் 1:27 இல்
ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் என்று கூறப்பட்டுள்ளது

ஆனால் ஏன் மீண்டும் இரண்டாம் அதிகாரத்தில் (ஆதியாகமம் 2:22) இவ்வாறு கூறப்பட்டுள்ள?

*பதில்*
எளிதான கேள்வியைப் போன்று தோன்றினாலும் – ஆழமாக கவனிக்கவேண்டிய ஒரு பதில்.

வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் மோசே எழுதியதாக நாம் கூறுகிறோம்.

குறிப்பாக லூக்கா 24:27,44ல், மோசே, சங்கீதம் மற்றும் தீர்க்கதரிசிகளின் பிரமாணங்களைப் பற்றி இயேசு கிறிஸ்து பேசுகிறார்.

வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களான ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் பெரும்பாலும் மோசேயின் சட்டபுத்தகம் என்று அழைக்கப்படுகின்றன.

ஆதியாகமம் போக மற்ற 4 புத்தகங்கள் "மோசே சொன்னது" என்பது போன்ற சொற்றொடர்களுடன் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது சுவாரஸ்யமானது.

ஆனால் அப்படிப்பட்ட வார்த்தை அல்லது ஊர்ஜீதம் “மோசே சொன்னது, மோசே எழுதியது” என்பது போன்ற நேரடியான ஆதாரங்கள் ஆதியாகம புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் மற்றும் உபாகமம் ஆகியவற்றை மோசே ஊர்ஜீதமாக எழுதினார் என்று அறிஞர்கள் ஆதியாகமத்தில் உள்ள இப்படிப்பட்ட வேறுபாட்டை விளக்குகிறார்கள்.

ஆகவே மோசே நேரடியாக ஆதியாகமத்தை எழுதியிருக்க வாய்பில்லை என்றும் அவர் ஆதியாகமத்தின் ஆசிரியராக அல்லது தொகுப்பாளராக மட்டுமே பணியாற்றினார் என்றும் விளக்குகிறார்கள்.

அப்படி பார்க்கும் போது ஆதியாகமத்தின் உண்மையான உரை மோசேக்கு முன்பு வாழ்ந்த மக்களிடமிருந்து வந்தது.

இந்த நம்பிக்கை உண்மை என்பதையும் நம்பக்கூடிய தன்மையிலும் ஆதியாகமத்தில் சில அறிகுறிகள் உள்ளன.

ஆதியாகமம் புத்தகம் முழுவதும், டோலிடோத் என்ற எபிரேய வார்த்தை தவறாமல் தோன்றுவதைக் காணலாம்.

டோலிடோத் என்ற சொல் :

"வரலாறு இவைகளே ..." அல்லது
"வம்ச வரலாறு..." அல்லது
"குறிப்புகள் இவைகளே ..."

போன்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவை முந்தைய டிரான்ஸ்கிரிப்ட் (பார்த்து எழுதப்பட்டது அல்லது எழுதப்பட்ட நகல்) என்று சொல்லப்படும் பல்வேறு ஆசிரியர்களின் கையொப்பக் வரிகளாகத் தோன்றுகின்றன.

டோலிடோத் என்ற சொல் பதினொரு முறை தோன்றுகிறது:

1- ஆதி. 2:4 வானங்களையும் பூமியையும் பற்றிய பதிவுகள்.
     இது படைப்பைக் குறித்த தேவனுடைய குறிப்பு.

2- ஆதி. 5:1 ஆதாமின் பதிவுகள்.

3- ஆதி. 6:9 நோவாவின் பதிவுகள்

4- ஆதி. 10:1 சேம், காம் மற்றும் யாபேத்தின் பதிவுகள்

5- ஆதி. 11:10 சேமின் பதிவுகள்

6- ஆதி. 11:27 தேராகுவின் பதிவுகள்

7- ஆதி. 25:12 இஸ்மவேலின் பதிவுகள்

8- ஆதி. 25:19 ஈசாக்கின் பதிவுகள்

9- ஆதி. 36:1,9 ஏசாவின் பதிவுகள்

10- ஆதி. 37:2 யாக்கோபின் பதிவுகள்

11- யாத். 1:1 இஸ்ரவேல் புத்திரரின் பதிவுகள்.

டோலிடோத் என்ற எபிரேய வார்த்தை, அதாவது "பதிவுகள்," "வரலாறு" அல்லது "தலைமுறைகள்" என்பது ஒவ்வொரு பதிவின் முடிவிலும் காணப்படுகிறது என்றும் அது கையொப்ப வரியாக செயல்படுகிறது என்றும் மேலே கூறினேன்.

காலப்போக்கில் ஏற்பட்ட பல மொழிபெயர்ப்புகளால் இடைஇடையே ஒன்றுக்கொன்று கோர்க்கப்பட்டிருந்தாலும் இந்த டோலிடோத் என்று வரும் இடங்களில் அந்ததந்த எழுத்தாளர்களின் எல்லைகளாக அல்லது பிரிவு தலைப்புகளாக அவை பதிவுகளின் தனிப் பிரிவுகளாக தெரிகிறது.

அவை தொடக்க புள்ளியாக இருந்தால், அவரது மரணத்திற்குப் பிறகு நடக்கும் விஷயங்களைப் பற்றி எழுத்தாளர் எழுதுகிறார்.

ஆனால் நீங்கள் அவற்றை (Signature Line அல்லது முடிவு உரை) கையொப்பக் கோடாகப் புரிந்துகொண்டால், எல்லாவற்றிற்கும் முந்தைய நிகழ்வுகள் எழுத்தாளரின் வாழ்நாளில் அல்லது அதற்கு முன்பு நிகழ்ந்தன என்பதாகும்.

உதாரணத்திற்கு : உங்களைப் பற்றி ஒரு சுயசரிதை எழுதும்போது, ​​பொதுவாக நீங்கள் உங்கள் குடும்ப வரலாற்றைப் பற்றி கொஞ்சம் ஆரம்பித்தில் துவங்கி பின்னர் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய விவரங்களைத் தொடங்குவீர்கள்.

அது போலவே ஆதியாகமம் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1-ஆதியாகமம் 1:1 முதல் ஆதியாகமம் 2:4 வரை (முதல் பகுதி) பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளின் பதிவு.

2-ஆதியாகமம் 2:4 முதல் ஆதியாகமம் 5:1 வரை ஆதாமின் பதிவுகள்.

முதல் ஐந்து நாட்கள் தான் இல்லாததால் - ஆதாம் தன் வரைவில் அவர் ஆறாவது நாள் பற்றி ஒரு பெரிய விவரத்தைத் தருகிறார். வசனத்தை ஒப்பிட்டுப் பார்க்கவும்.

அடுத்த பதிவு ஆதியாகமம் 5:1 முதல் ஆதியாகமம் 6:4 வரை செல்கிறது.
அதை பதிவுசெய்தவர் நோவா. எழுத்துப் பாணியில் மாற்றத்தைக் கவனிக்கமுடியும். ஒரு சுருக்கமான குறிப்பாக மட்டுமே அது மீண்டும் படைப்புடன் தொடங்குகிறது என்பதைக் காணலாம்.

6ம் நாளில் கடவுள் மனிதனை மட்டுமே படைத்தார்.

முதல் மனிதரான ஆதாமுக்கு துணை இல்லாமல் இருந்தது.

இந்த சூழ்நிலையில் ஆதாமை விட்டு வெளியேற கடவுள் விரும்பவில்லை.  மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று கடவுள் அறிந்திருந்தார்.  ஆனால் மனிதன் இதை புரிந்து கொள்ளவில்லை.

ஆறாவது நாளில், கடவுள் ஒவ்வொரு வகையான விலங்குகளின் பிரதிநிதியையும் ஆதாமுக்கு முன் கொண்டுவந்தார்.

அதனால் அவர் அந்த விலங்குக்கு பெயர் சூட்டினார். இருப்பினும், விலங்குகளை ஆதாமுக்குக் கொண்டுவருவதில் கடவுளுக்கு மற்றொரு நோக்கம் இருந்தது. ஆதாமால் ஒவ்வொரு மிருகத்தையும் கவனமாகப் பார்க்கவும், இந்த விலங்குகள் எதுவும் தனக்கு ஒரு நல்ல தோழனை உருவாக்காது என்பதை புரிந்து கொள்ளவும் முடிந்தது.

ஆதாம் தான் எவ்வளவு தனிமையாக இருக்கிறான் என்பதை உணர்ந்தவுடன், கடவுள் மனிதனுக்காக ஒரு சிறப்பு தோழரை உருவாக்கினார்.

ஆதாமின் விலா எலும்புகளில் ஒன்றிலிருந்து அந்தப் பெண் உருவானாள்.

தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். ஆதி. 2:22

வேதாகமத்தில் ஆதி. 2:18லிருந்து 22 முடிய கோர்வையாக இப்போது வாசித்து பார்த்தால் நான் மேலே கூறியது தெளிவாக விளங்கும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக