வியாழன், 2 ஏப்ரல், 2020

#836 - இயேசு கிறிஸ்து சாத்தானால் 40 நாட்களும் சோதிக்கப்பட்டாரா? அல்லது நாற்பது நாள் முடிவில் இயேசு கிறிஸ்த்துக்கு பசி எடுக்கும்போது சோதிக்கப்பட்டாரா?

#836 - *இயேசு கிறிஸ்து சாத்தானால் 40 நாட்களும் சோதிக்கப்பட்டாரா? அல்லது நாற்பது நாள் முடிவில் இயேசு கிறிஸ்த்துக்கு பசி எடுக்கும்போது சோதிக்கப்பட்டாரா?*

*பதில்*
தேவனுடைய நீதியை நிறைவேற்றும்படியாக இயேசு கிறிஸ்து, யோவானால் ஞானஸ்நானம் எடுத்தபின், பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக அவர் பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் (மத். 4:1; மாற்கு 1:12; லூக்கா 4:1).

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இயேசு கிறிஸ்து தனியாக இருந்தார், உபவாசித்தார், சோதிக்கப்பட்டார்.

அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்திலிருந்தே தேவனுடைய சித்தத்திற்கு இயேசு முழுமையாக அற்பணித்தது தனது பிற்கால ஊழியத்தின் கடினமான வருடங்களுக்கும் அவருக்கு முன்பாக இருந்த சிலுவை மரணத்திற்கும் இது எவ்வளவு அவசியமாக இருந்திருக்க வேண்டும் (லூக்கா 12:50).

அவருடைய சோதனைகளை குறித்து மத்தேயு & மாற்கு சுருக்கமாகவும்  லூக்கா கொஞ்சம் விரிவாகவும் பதிவிட்டுள்ளனர்.

“நாற்பது நாட்களிலும் இயேசு சோதிக்கப்பட்டாரா அல்லது நாற்பது நாட்கள் உபவாசம் முடிந்தபின் சோதிக்கப்பட்டாரா என்றால்மத்தேயுவின் கணக்கைப் படிப்பதன் மூலம், இயேசு நாற்பது நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபின், பிசாசு அவரிடம் வந்ததை கவனிக்கிறோம். மத். 4:2

ஆனால் லூக்காவோ - கர்த்தர் "நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார் -லூக்கா 4:2 என்று பதிவு செய்கிறார்.

சோதனையானது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை லூக்கா சுட்டிக்காட்டுகிறார் என்று சிலர் நம்புகிறார்கள்.

இருந்தபோதும், நாற்பது நாட்களின் உபவாசத்திற்குப்பின்னர் சோதிக்கப்பட்ட மூன்று முக்கிய நிகழ்வுகளை மாத்திரம் லூக்கா பட்டியலிட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

இடைப்பட்ட நாற்பது நாட்களில் இயேசு கிறிஸ்து பல சோதனையைத் தாங்கியிருக்கலாம். ஆனால் மூன்று சோதனைகளும் இயேசுவின் வனாந்தர தனிமையின் உச்சக்கட்ட, மிகத் தீவிரமான சோதனை என்றே கவனிக்கமுடிகிறது.

"சோதனையெல்லாம் முடிந்தபோது" பிசாசு அவரை விட்டு *சிலகாலம்* விலகியதாக லூக்கா கூறுகிறார் (4:13).

பிரதான ஆசாரியர்களின் கைகளால் துன்பப்படுவதற்கும் மரிப்பதற்கும்  தான் எருசலேமுக்குப் போவதாக இயேசு சீஷர்களிடம் சொன்னபோது, ​​பேதுரு “அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.’” (மத். 16: 22-23).

ஆகவே 40நாள் முடிந்த பின்பு மாத்திரம் அல்ல உபவாசம் இருந்த 40நாட்களிலும் மேலும் சிலுவை மரணம் வரை அவர் சோதிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தார் என்பதை நாம் அறிகிறோம்.

அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.  எபி. 2:18

நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.

ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபி. 4:15-16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக