வியாழன், 5 டிசம்பர், 2019

#649 - பரிசுத்த வேதாகமத்தை வாசித்து விளங்கிக்கொள்ள, பரிசுத்த ஆவியானவரின் துணை இருந்தால் மட்டுமே முடியும் என்றும் அதற்கும் தேவனின் அனுக்கிரகம் வேண்டும் என்றும், அது எல்லாருக்கும் கிடைப்பதுமில்லை என்றும் சிலர் போதிக்கிறார்கள்.

#649 - *பரிசுத்த வேதாகமத்தை வாசித்து விளங்கிக்கொள்ள, பரிசுத்த ஆவியானவரின் துணை இருந்தால் மட்டுமே முடியும் என்றும் அதற்கும் தேவனின் அனுக்கிரகம் வேண்டும் என்றும், அது எல்லாருக்கும் கிடைப்பதுமில்லை என்றும் சிலர் போதிக்கிறார்கள்*.

அது அப்படி என்றால் இயேசுவை நேசித்து எல்லா வேளையிலும் அவரையே சார்ந்து இருக்கும் பெண்களுக்கு சில வேதவசனங்களை புரிந்து கொள்ள கஷ்டமாயிருக்கு என்று சொன்னால், அது நீங்கள் செய்த பாவம் என்று சொல்லி வேதனை படுத்துகிறார்கள்.

வசனம் விளங்காததால் நாங்க பாவிகளா? விளங்கிக்கொள்ள விரும்பியது பாவமா?

*பதில்* :

*வேதத்தை புரிந்துகொள்ள ஒருவருக்கு பரிசுத்த ஆவியின் நேரடி உதவி தேவையா*?

இப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் தேவன் கற்பித்ததைப் புரிந்துகொள்வதற்கு மக்கள் பொறுப்பல்ல என்றாகி விடுகிறது.

பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு புரிதலைத் தரவில்லை ஆகவே வேதாகமத்தை படிக்காமல் இருந்து விடலாம் என்று சாக்கு போக்கு சொல்ல இது உதவுகிறது.

பழைய ஏற்பாடும் பத்து கட்டளைகளுடன் கூடிய 603 கட்டளைகளும் புதிய மற்றும் சிறந்த உடன்படிக்கையினால் கிறிஸ்துவின் சிலுவையில் முடிவுபெற்றது   (ரோ 10:4) என்று எவ்வளவு ஆதாரத்துடன் சொன்னாலும் ஆவியானவர் எங்களுக்கு வெளிப்படுத்தவில்லை என்று அறிந்தும் அறியாததையும் பின்பற்றினால் தண்டனைக்கு தப்பித்துக்கொள்ள முடியாது.

அவருடைய சித்தத்தை நாம் புரிந்து கொள்ளும்படி தேவன் கட்டளையிடுகிறார். "ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்." (எபேசியர் 5:17).

தேவ ஆவியானவரின் உதவியின்றி செய்ய முடியாது என்று நீங்கள் கூறும் ஒன்றை அவர் ஏன் கட்டளையிட வேண்டும்?

தேவன் ஒருவருக்கு வெளிபடுத்தி இன்னொருவருக்கு மறைக்கிறவர் அல்ல (ரோமர் 2:11).

எபே. 3:1-7 இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள் பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன்.

உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே;

அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.

இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.

அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்;

இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை.

தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன்.

தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போது சத்தியம் அறியப்படுகிறது.
தேவன் கற்பித்ததைப் படிப்பது நமக்குப் புரிதலைத் தருகிறது.

பவுலும் மற்ற அப்போஸ்தலர்களும் தங்கள் கடமையைப் புரிந்துகொண்டார்கள். அதாவது தேவனுடைய வார்த்தையை மனிதர்களுக்குக் கற்பிப்பதாகும்.

பவுல் அதற்கான ஜெப உதவியை நாடினார் (எபே. 6:19).  தேவன் தனது விருப்பத்தை வெளிப்படுத்த தேர்வு செய்த முறை இது. "எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரியமாயிற்று." (I கொரி. 1:21).

அந்த செய்தி மனிதரிடமிருந்து தோன்றவில்லை. "அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல," (I கொரி. 2: 6).

இந்த உலக ஞானிகளால் இதுபோன்ற இரட்சிப்பின் திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. ஆனால், தேவன் அதைத் இயேசுவின் மூலமாகவும் அப்போஸ்தலர்களும் வரும் வரை உலக மனிதர்களிடமிருந்து அதை மறைத்து வைத்திருந்தார்.

"உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;" (I கொ. 2: 7-9).

தேவன் இவற்றை மறைத்து விடாமல், அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தினார். “நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும் ஆராய்ந்திருக்கிறார். மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்."(I கொ. 2: 10-11).

இந்த வெளிப்பாடு இயேசுவின் மரணத்திற்கு முன்பு அப்போஸ்தலர்களுக்கு வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்." (யோ. 14:26).

கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது உங்களுக்கும் எனக்கும் கொடுக்கப்பட்ட வாக்குறுதில்ல.

இயேசு இந்த பூமியில் இருந்த போது நாம் உயிருடன் இல்லை - அவருடைய போதனைகளுக்கு நேரடி சாட்சியம் நாம் கொடுத்ததில்லை - அவர் போதித்தவற்றை நினைவு கூற நமக்கு அவசியம் ஏற்படபோவதும் இல்லை.

இது அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே வாக்குறுதியாக இருந்தது.

ஆகவே, பரிசுத்த ஆவியினால் தேவன் தம்முடைய போதனைகளை அப்போஸ்தலர்களுக்கு வெளிப்படுத்தினார்.

பின்னர் அவர்கள் தங்கள் எழுத்துக்கள் மூலம் அவற்றை நமக்கு அனுப்பினர். "நாங்களோ உலகத்தின் ஆவியைப் பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம்.  அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம். "(I கொ. 2: 12-13).

ஆனால் எல்லோரும் உண்மையை விரும்புவதில்லை.

சாதாரண அல்லது உலக மனிதன் உலக ஞானத்தையே விரும்புகிறான்.

தெய்வீக வெளிப்பாடு அவர்களுக்கு முட்டாள்தனம் போல் தோன்றுகிறது. எனவே அவர் அதை நிராகரிக்கிறார். "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்." (I கொ. 2:14).

பவுல், இங்கே, I கொரிந்தியர் 1: 18-24-ல் அவர் முன்பு கூறிய வாதத்திற்குத் திரும்புகிறார். கொடுக்கப்பட்ட எந்த அடையாளமும் ஒருபோதும் போதாது என்றாலும் யூதர்கள் அதிக அடையாளங்களை விரும்பினர்.

புறஜாதியினர் அதிக ஞானத்தை விரும்பினார்கள், ஆனால் கொடுக்கப்பட்ட ஞானம் அவர்கள் எதிர்பார்த்தது அல்ல. பவுலின் முடிவு என்னவென்றால், தேவனுடைய போதனையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, ஏனென்றால் அவர்கள் விரும்பாதது.

விக்குரியவன், தேவனிடமிருந்து வரும் ஆவிக்குரிய ஞானத்தை சார்ந்து இருப்பவன். இந்த விஷயத்தின் உண்மையை துல்லியமாக தீர்மானிக்க முடிகிறது. "ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான்." (I கொ. 2:15).

இப்போது, ​​சிந்தியுங்கள்: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? தேவன் சிலரை அவருடைய போதனைகளை நிராகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ ​​செய்கிறாரா, அல்லது தேவ ஞானத்தைப் பற்றிய ஒவ்வொரு நபரின் அணுகுமுறையா?

ஒவ்வொருவரும் உண்மையை விரும்புவதில்லை. - II தெச. 2:12.

சிலர் தங்கள் சொந்த கருத்துக்களை விரும்புகிறார்கள். "ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்.  அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்."(எபே. 4: 17-19).

தேவனை புரிந்துகொள்ளாமல் இருப்பதற்கு இது தேவனுடையதை அல்ல, தீய மனிதனின் விருப்பம் என்பதே.

வேதத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆவியானவரின் நேரடியான அனுகுமுறை அவசியம் என்று ஒருவர் கூறினால் அவர்கள் எழுதப்பட்ட விஷயத்தை தங்கள் விருப்பத்திற்கு இணங்க வைக்கும்படி உங்களை வஞ்சிக்க நினைக்கிறார்கள்.

ஆவியானவரின் செயல்பாடு எங்கே?
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட புரிதலின்படி ஆவியானவரின் நேரடி வெளிப்பாட்டில் இருக்கிறதா அல்லது அப்போஸ்தலர்கள் மூலம் கொடுக்கப்பட்ட தேவனுடைய சித்தத்தின் வெளிப்பாட்டில் உள்ளதா?

மேலே குறிப்பிட்ட வசனத்தின் படி தெளிவாக அப்போஸ்தலர்கள் மூலம் கொடுக்கப்பட்ட தேவனுடைய சித்தத்தின் வெளிப்பாட்டில் உள்ளது என்று நாம் அறிகிறோம்.

தேவ வார்த்தை தெளிவாக அனைவரிடத்திலும் எடுத்து செல்லப்படுகிறது. சிலர் அதை விரும்பாததால் எப்போதும் அதை நிராகரிப்பார்கள்.

"அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக் குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?

அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே.

ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான்.

ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்."(ரோ. 10:14-17).

மனிதனுக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவி தேவனுடைய வார்த்தையை மனிதனுக்கு வழங்குவதில் இருந்தது.

அதன் மூலம் மனிதன் கற்றுக்கொள்வான் என்று எதிர்பார்க்கப்படுகிறது 1தீமோ. 2:3-4

தேவன் தனது வேதத்தை புரிந்துகொள்வதைத் தடுக்கவில்லை. மனிதன் தனது பாவத்தின் மீது இருக்கும் பற்றுதலினால் அதை தானாகவே செய்கிறான்.

ஆனால் தேவனுடைய கட்டளையோ அனைவராலும் இலகுவாக புரிந்து கொள்ளமுடியும்.

2தீமோ. 3:16-17 வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. 

சங். 119:99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக