வியாழன், 28 நவம்பர், 2019

#630 - தேவனுடைய இராஜ்யம் என்று இங்கே எதை குறிக்கிறது?

#630 - *தேவனுடைய இராஜ்யம் என்று இங்கே எதை குறிக்கிறது?*
இதற்கு விளக்கம் தாருங்கள் - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் மத். 6:33

*பதில்*
வயிற்று தேவைக்காகவும் வாழ்க்கை வசதிகளுக்காகவும் அநுதினமும் தேடுவதே மக்களின் வழக்கம்.

வேலைக்கு போக வேண்டும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எப்போதும்  குறிக்கோளாக இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தொழுகைக்கு கூட போக யோசித்து கூடுதல் நேரம் வேலை பார்ப்பார்கள் அல்லது அன்றாவது கொஞ்சம் உறங்கலாம் என்றிருப்பார்கள்.

பறவைகளும் பூக்களும் போல, நம் சொந்த கடமையைச் நாம் செவ்வனே செய்தால், நம்முடைய தற்காலிக விருப்பங்களை தானாகவே பெறுவோம் என்று கிறிஸ்து கூறியுள்ளார்.

ஆனால் இந்த பூமிக்குரியவைகளை தேடுவதில் முதலிடம் கொடுக்காமல் கிறிஸ்து ஏற்படுத்தப்போகிற இராஜ்ஜியத்தை நாடவேண்டும் என்கிறார். கிறிஸ்துவானவர் இந்த பூமியில் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் சொன்ன இந்த வாக்கியமானது அவருடைய சிலுவை மரணத்திற்கு பின் 50ம் நாளில் நிறைவேறியது. தேவனுடைய இராஜ்ஜியம் என்று சொல்லப்படுகிற கிறிஸ்துவின் ஆளுகையானது - பெந்தேகோஸ்தே நாளன்று ஸ்தாபிக்கப்பட்டது விளக்கத்திற்கு கேள்வி #337ஐ பார்க்கவும். முதல் மற்றும் பெரிய கடமை என்ன என்பதை அவர் இங்கே சொல்கிறார்.

பறவைகளும் பூக்களும் தேவனுக்கு ஊழியம் செய்வது கிடையாது. இருந்த போதும் அவைகள் அன்றாட ஆகாரத்தையும் தனக்கு தேவையான உடைகளையும் வண்ண வண்ணமாக பெற்றுக்கொள்கின்றன மத் 6:28-30.

ஆனால் தேவனுடைய உன்னதமான இராஜ்ஜியத்தை நாம் தேடி நாடி தொழுகையில் ஈடுபட்டு அவருக்கு முன்னுரிமை கொடுக்கும் போது இந்த உலகத்தின் தேவையானவைகளை அவர் நமக்கு கொடுப்பது நிச்சயமே.

தேவனுடைய இராஜ்ஜியம் என்று இந்த இடத்தில் குறிப்பிடுவது – இந்த உலகத்தில் கிறிஸ்து உருவாக்கிய தன்னுடைய சபையாகிய தேவனுடைய சபையை.

அவரின் ஆளுகையை நாம் விரும்ப வேண்டும். சபை கிறிஸ்துவால் ஆளப்படுகிறது – கொலோ 1:18.

அவருடைய ஆளுகையை நாம் விரும்புவதென்றால் சபையின் பெயர், சபையின் நடவடிக்கைகள், சபை நடத்தும் முறைகள், சபையை நடத்தும் விதங்கள், உறுப்பினர் அமைக்கும் மற்றும் செயல்படும் முறைகள், காணிக்கை கொடுக்கும் முறைகள், கர்த்தருடைய பந்தி எடுக்கும் முறைகள், பாடும் முறைகள், ஜெபிக்கும் முறைகள்  என்று அவருடைய 100% கட்டளையை நாம் கைக்கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையையும் சபையையும் எப்படி நடத்த வேண்டும் என்று தன்னுடைய அப்போஸ்தலர்கள் மூலம் நமக்கு ரோமர் புத்தகம் துவங்கி யூதா வரைக்கு முழுவதுமாக சொல்லி வைத்திருக்கிறார் – அப் 1:3, தானி 2:44-45.

அதை பின்பற்றுவதற்கு நாம் முன்னுரிமை கொடுப்போம் – மற்ற தேவைகளை தேவன் தாமாக நமக்கு அளிப்பேன் என்று வாக்களித்திருக்கிறார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக