திங்கள், 28 அக்டோபர், 2019

#587 - ஸ்திரியே உனக்கும் எனக்கும் என்ன என் வேளை இன்னும் வரவில்லை என்று இயேசு சொன்னற்கு காரணம் என்ன? யோ 2:4 - விளக்கவும்

#587 - *ஸ்திரியே உனக்கும் எனக்கும் என்ன என் வேளை இன்னும் வரவில்லை என்று இயேசு சொன்னற்கு காரணம் என்ன? யோ. 2:4 - விளக்கவும்*

*பதில்*
மரியாளுக்கும் இயேசுவுக்கும் இடையிலான இந்த சம்பாஷனை உண்மையில் எதைக் குறிக்கிறது என்பது குறித்து முடிவில்லாத விவாதங்களுக்கு ஆதாரமாக உள்ளது.

ஆனால் ஒரு விஷயத்தை முன்னோக்காக காணமுடியும்.

திருமண விருந்தில் இயேசு ஒரு அற்புதத்தை செய்தாலும், அந்த அற்பதமானது அவரை மேசியா என்று நமக்கும் அந்த சம்பவத்திற்கு பின்னர் இதை குறித்து அறிந்தவர்களுக்குமேயன்றி அந்த இடத்தில் கூடியிருந்த வேறு யாரும் அறியவில்லை.

மரியாளுக்கும், அங்கிருந்த வேலைக்காரருக்கும், ஒரு சில சீஷர்களுக்குமேயன்றி இயேசு என்ன செய்தார் என்று வேறு யாருக்கும் அப்போது தெரியாது.

மற்ற உறவினர்களை அழைத்தது மாத்திரமல்ல இயேசுவையும் அவர் சீடர்களையும் விருந்துக்கு அழைத்தார்கள் என்றால் அந்த திருமணம் வசதியான வீட்டு திருமணமாக இருந்திருக்க வேண்டும் (யோ 2:2). எவ்வளவு சிறந்த திட்டங்களுடன் ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் சில குறைகள் இருக்காமல் இருந்ததில்லை.

திருமண விருந்து முடிவதற்குள், விருந்தினர்களுக்காக வைத்திருந்த திராட்சை ரசம் தீர்ந்து போனது.

மரியாள் பந்தி விசாரிப்பில் இருந்ததை வைத்து பார்க்கும் போது அந்த திருமண வீட்டினர் மரியாளுக்கு நெருங்கிய சொந்தமாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது (யோ. 2:3). திராட்சை ரசம் குறைவுபட்டதை தன் மகனின் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.

குறைச்சலை குறித்து இயேசுவிடம் சொன்னால் நிச்சயம் ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும். என்ன வகையில் இந்த குறையை இயேசு தீர்த்திருப்பார் என்று மரியாள் எதிர்பார்ப்பினை குறித்த முடிவை எடுக்க போதுமான தகவல்கள் இல்லை.

ஆனால் மரியாளோ, அங்கிருந்த வேலைக்காரரிடம் இயேசு என்ன சொல்கிறாரோ அதன் படி செய்யுங்கள் என்று சொல்லி கடந்து சென்று விட்டார் (யோ. 2:5)

இயேசு நிச்சயம் ஏதாவது செய்வார் என்ற நம்பிக்கை மரியாளிடம் இருந்ததை காணமுடிகிறது.

மரியாளுக்கு இயேசுவின் பதில் ஒரு அவமரியாதையின் வார்த்தை அல்ல. இப்படி ஸ்திரீயே என்று இன்னும் பல இடங்களில் குறிப்பிடுவதை நாம் அறியவேண்டும். மத். 15:28, யோ. 4:21; 19:26; 20:13.

இந்த வார்ததையை நம் மொழியில் கடுமையானது போல தோன்றினாலும், இயேசு தன் தாயை மிருதுவாக மறுப்பதை நாம் கவனிக்க தவறகூடாது.

யாரும் அவர் என்ன செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதை இயக்க முடியது. இந்நாட்களில் மேடை ஜெபங்களில் ஆண்டவருக்கு கட்டளையிட்டு, அதிகாரத்தோடு ஆண்டவரே தாரும் இப்போதே தாரும் இன்றே தாரும் என்று கட்டளையிடும் அநேகருடைய ஜெபத்தை நான் கேட்டிருக்கிறேன்.

இயேசு என்ன செய்வார் என்பது அவரின் சொந்த நேரத்தில் வரும்.

தன் வேளை வந்ததாக சொல்லபடும் இடத்தை நீங்கள் உணர்ந்தால் மேசியா என்ற இயேசுவின் கூற்று பகிரங்கமாக நிரூபிக்கப்பட வேண்டிய வேளை இன்னும் வரவில்லை என்றே இயேசு கூறியிருப்பதாக உத்தேசிக்க முடியும்.

வேத வசனங்களை கீழே பட்டியலிடுகிறேன் - கவனிக்கவும்:

யோ. 7:6 இயேசு அவர்களை நோக்கி: *என் வேளை இன்னும் வரவில்லை*, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது

யோ. 7:30 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் *அவருடைய வேளை இன்னும் வராதபடியினால்* ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.

யோ. 8:20 தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். *அவருடைய வேளை இன்னும் வராதபடியினால்* ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை.

யோ. 12:23 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் *மகிமைப்படும்படியான வேளை வந்தது*.

யோ. 13:1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் *பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று* அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.

ஆகவே மரியாளில் இந்த வாக்கியமும் இயேசுவின் இந்த பதிலும் நாம் மேற்பரப்பில் காண்பதை விட அதிகமாக இருந்தது என்பதை இங்கே அறிகிறோம்.

அவர் தன்னை அறிவிக்க வேண்டும் என்று மரியாள் விரும்பியிருக்கலாம், ஆனால் இயேசு அவரைக் கடிந்துகொண்டு “இன்னும் வரவில்லை” என்ற அர்த்தத்தில் கூறியிருக்கலாம்.

இப்போதும் அநேகர் இந்த வாக்கியத்தை முன்னிட்டு மரியாளிடம் வேண்டுதல் செய்கிறார்கள் தாயே உன் மகனிடம் எனக்காக வேண்டிக்கொள் என்று ஆனால் ஒருவேளை இப்போது மரியாள் பேசுவதாக இருந்தால் *இயேசு சொல்கிறபடி செய்யுங்கள்* என்று நிச்சயம் சொல்லியருப்பார் !!

மரியாள் அல்ல இயேசு தான் வழியும் சத்தியமும் ஜீவனுமானவர். இயேசுவால் அன்றி பிதாவினிடத்தில் யாரும் போய்விட முடியாது. கொண்டு சேர்க்கவும் முடியாது. சிபாரிசு செய்தாலும் ஒன்றும் நடக்காது.

இயேசு சொன்னது போல் அவர் வார்த்தையை விசுவாசித்து பாவத்தை விட்டு மனந்திரும்பி ஞானஸ்நானம் எடுத்து இரட்சிப்பின் வாழ்வை பற்றிகொண்டிருந்தால் நிச்சயம் சகல ஆசீர்வாதத்தோடு நாம் வாழ்ந்து நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வோம்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக