வெள்ளி, 25 அக்டோபர், 2019

#580 - போதகர்கள் தவறு செய்யும்போது அதை தனிப்பட்ட விதத்தில் அவருக்கு சுட்டிக்காட்டி உணர்த்த கூட கூடாதா ?...

#580 - *போதகர்கள் தவறு செய்யும்போது அதை தனிப்பட்ட விதத்தில் அவருக்கு சுட்டிக்காட்டி உணர்த்த கூட கூடாதா* ?... 

Bro, சபை போதகர்கள், கர்த்தருடைய வேதத்திற்கு முரண்பட்டு பேசும் போதும், தவறு செய்யும் போதும், நாம் தனிப்பட்ட விதத்தில் அதை அவர்களுக்கு, உணர்த்தி காட்டினால்,

அதற்கு அவர்கள் : ஊழியக்காரனை யாரும் கேள்வி கேட்க கூடாது என்றும், அது எல்லாம் தேவனுக்கும் எனக்கும் இடையில் உள்ள விஷயம், விசுவாசிகள், ஊழியக்காரனை சாதாரண விசுவாசிகள் கேள்வி கேட்க கூடாது, என்று சொல்லி, ஊழியக்காரன் மனம் நொந்து உங்களை ஏதேனும் சொல்லிவிட்டால் அது உங்களுக்கு சாபமாகி விடும் என்று சொல்லி, பயமுறுத்துகிறார்கள்.

விசுவாசிகளும், பயந்து, வேதத்துக்கு முரண்பட்டு போதகர்கள் தவறு செய்யும் போது, தேவன் பார்த்து கொள்வார் என்று பயந்து, அமைதியாகி விடுகின்றனர்.

1. போதகர்கள் தவறு செய்யும்போது அதை தனிப்பட்ட விதத்தில் அவருக்கு சுட்டிக்காட்டி உணர்த்த கூட கூடாதா ?...

2. மேலும், ஊழியக்காரர் தவறு செய்தால், விசுவாசிகள் யாரும் அதை கேட்க கூட கூடாது என்றும், தேவன் மட்டும் தான் அதை கேட்க வேண்டும் என்றும் வேதத்தில் எங்காவது உள்ளதா ?...

இதற்கு, வேத வசனங்களின் அடிப்படையில் பதில் தருமாறு, அன்போடு கேட்டு கொள்கிறேன்

*பதில்*
புதிய ஏற்பாட்டு காலத்தில் யாரையும் தேவன் ஊழியம் செய்யும் படி தனியாக அழைப்பதில்லை.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட அனைவரும் ஆசாரியர்கள் – அதாவது தேவ ஊழியம் செய்ய தகுதியானவர்கள் (1பேதுரு 2:9)

ஆனால் சபையை நடத்துபவர்கள் புதிய கிறிஸ்தவனாக இருக்க கூடாது (1தீமோ. 3:6)

கேள்வி கேட்பவர்களுக்கு ஏற்ற உத்தரவு சொல்லவும், சரியான பாதையில் மற்றவர்களை நடத்தவும் சரியாக வேதத்தை பகுத்துப் போதிக்கவும் ஒரு ஊழியர் அறிந்திருத்தல் அவசியம் (2தீமோ. 2:15)

எல்லா நீடிய சாந்தத்தோடும் புத்தியோடும் மற்றவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டும் அளவிற்கு வளர்ந்திருத்தல் அவசியம் (2தீமோ. 4:2, தீத்து 1:9)

முக்கியமாக திருமணம் ஆனவராகவும் அவருக்கு பிள்ளையும் இருத்தல் வேண்டும் என்று வேதத்தில் பார்க்கிறோம் (1தீமோ. 3:4)

பணம் சம்பாதிக்கும் வேலையின் நேரம் போக ஊழியத்தை பார்ப்பதற்கும் சபையை விசாரிப்பதற்கும் நேரம் போதாமையால் சிலர் முழு நேர பணியில் ஈடுபடுவார்கள்.

ஒரு உலக வேலையை பார்த்துக்கொண்டு தேவ ஊழியத்தை செய்வது பாவமல்ல – மாறாக அது அவசியமாக இருக்கிறது. 2தெச. 3:10

இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்யகூடாது என்ற வசனம் உலக வேலையை அல்ல அந்த வசனமானது விக்கிரகத்திற்கும் தேவனுக்கும் ஊழியம் செய்ய முடியாது என்றே சொல்கிறது மத். 6:24

இப்படி தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து சபையிலும் ஊழியத்திலும் ஈடுபடுபவர்களை சபையார் எல்லா கணத்தோடும் நடத்த வேண்டியது அவசியம்.

நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். 1தீமோ. 5:17

இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 1கொரி. 16:16

1தெச. 5:12-13 அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.

1. *போதகர்கள் தவறு செய்யும்போது அதை தனிப்பட்ட விதத்தில் அவருக்கு சுட்டிக்காட்டி உணர்த்த கூட கூடாதா* ?...

2. *மேலும், ஊழியக்காரர் தவறு செய்தால், விசுவாசிகள் யாரும் அதை கேட்க கூட கூடாது என்றும், தேவன் மட்டும் தான் அதை கேட்க வேண்டும் என்றும் வேதத்தில் எங்காவது உள்ளதா* ?...

இந்த கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி நீங்கள் கருத்து வேறுபாட்டை எவ்வாறு அணுக வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். அவரை வெல்வதற்கோ அல்லது அவரை சத்தியத்திற்கு திருப்புவதற்கான முயற்சியாகவா என்பது அவசியம்.

2தீமோ. 2:22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.

2தீமோ. 2:23 புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.

2தீமோ. 2:24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.

2தீமோ. 2:25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்,

2தீமோ. 2:26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.   

பெரும்பாலும் என்ன நடக்கிறது என்றால், ஊழியர்கள் யாரும் கேள்வி கேட்பதை விரும்ப மாட்டார்கள்.

ஒரு கிறிஸ்தவரின் சரியான அணுகுமுறை என்னவென்றால்:

1பேதுரு 3:14 நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து;
1பேதுரு 3:15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
1பேதுரு 3:16 கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடைவர்களாயிருங்கள்.

பொதுவான உண்மை என்னவென்றால், ஏராளமான தவறான வேத ஆசிரியர்கள் சுற்றித் திரிகிறார்கள்.

சபையார் தங்களை கவனித்து உற்று நோக்கவோ அல்லது என்ன பேசப்படுகிறது என்று கேள்வி கேட்கவோ கூடாது என்று வகையறுப்பது தவறான ஆசிரியர்களின் நன்மையாகிவிடுகிறது.

சோதித்து அறிய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை (I யோ. 4: 1).

ஆரம்பகால கிறிஸ்தவர்களின் அணுகுமுறையில் இதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் சொன்னதை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை; அவர்கள் அதை வேதத்தோடு சரிபார்க்கிறார்கள். "அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, *காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால்*, தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்" (அப். 17:11).

எடுத்துக்காட்டாக, நான் உங்கள் கேள்விக்கு என் மனம் தோன்றினபடி சொல்லாமல் என் கருத்துக்கு ஆதாரமாக நியாயமான வசனங்களை கோடிட்டு காட்டும் போது நீங்கள் அதை சரிபார்க்க முடியும்.

உங்கள் போதகர் கேள்விகளைக் கேட்க விரும்பவில்லை என்றால், வேதவசனங்களுடன் தனது கருத்தை ஆதரிக்காமல் பதில்கள் அளிக்கிறார், அல்லது வேதவசனங்களை தெளிவாக தவறாக பயன்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது (II பேதுரு 3: 15-16)

சத்தியத்தின்படி நடக்கும் எந்த ஊழியரும் தைரியமாக தன் நடக்கைக்கு வேதத்தை ஆதாரமாக காண்பிக்க முடியும். அப்படி தன் உபதேசத்திற்கு ஆதாரமில்லாத பட்சத்தில் அவர் தவறான நோக்கத்தில் செயல்பட எல்லா அநுகூலங்களும் உள்ளன (பிலி. 3:19)

உங்கள் சொந்த இரட்சிப்புக்கு நீங்கள் பொறுப்பு

"ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்"(பிலி. 2: 12-13).

நீங்கள் தேவனுடைய வார்த்தையை கையில் வைத்திருக்கும்போது உங்கள் ஊழியர் உங்களை தவறாக வழிநடத்தியதாக நியாயத்தீர்ப்பு நாளில் நீங்கள் இயேசுவிடம் சொல்ல முடியாது.

அதே வேளையில் நீங்கள் கேள்வி கேட்கும்போது, ​​ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் நீங்கள் தவறாக இருக்கலாம் என்பதைக் கண்டறிய அல்லது ஏற்றுக்கொள்ள நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் கவனிக்காத ஒரு வாக்கியத்தின் ஒரு விஷயத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் அல்லது புரிந்திருக்கிறீர்கள் என்பதை மாற்றிவிடவாய்ப்பு உள்ளது.

குற்றப்படுத்துவதற்கும் விளக்கம் கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து இந்த சூழ்நிலையை அணுகவும்.

மேலும் வேதத்தின்படி உள்ள எந்த சபையின் நிர்வாகமும் ஒருவர் கையில் இருக்காது.

சபை நிர்வாகமானது 1க்கு மேற்பட்ட மூப்பர்கள் கையில் இருக்க வேண்டும். மூப்பர்கள் என்றால் வயதிலும் மூத்தவர்கள் மற்றும் குடும்பமாக சத்தியத்தின்படி வாழ்பவர்களை அடங்கியது (தீத்து 1:5-9)

ஊழியக்காரர்களின் / உபதேசியர்களின் தவறுகளை மூப்பர்களுக்கு தெரியபடுத்தி அவர்கள் இந்த குழப்பங்களை வேதத்தின்படி அனுகி சரிசெய்ய வேண்டும்.

இந்த முறையில் அமைக்கப்படாத எந்த சபையும் காலபோக்கில் தனி நபர் ஆட்சியாகி முதலாளித்தத்துவத்தில் ஆட்கொள்ளப்பட்டு குழப்பங்களுக்கு அளவில்லாமல் எப்போதும் சண்டை மற்றும் பிரிவினையோடு காணப்படும்.

உங்கள் விசுவாசத்திற்கு நீங்கள் உத்திரவாதியாகையால் மத். 18:15-17ன் படி பிரச்சனைகளை அனுகவேண்டும்.

தவறுசெய்த நல்ல குணமுள்ளவர் மனந்திரும்புவார். நீதி. 10:8

கடைசியாக பவுல் தீமோத்தேயுவிற்கு சொன்ன இந்த சூழ்நிலையின் வசனத்தை எழுதுகிறேன் :

1தீமோ. 5:19-22  மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.

மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி. பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.

நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.

ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள்.

யாரும் யாரையும் சபிக்க முடியாது. பாவம் செய்த ஆத்துமாவே கணக்கொப்புவிக்கும்.  நீதி. 26:2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்து போவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக