வெள்ளி, 11 அக்டோபர், 2019

#555 - சூழ்நிலை நிமித்தம் விக்கிரகங்களுக்கு முன்பாக வணங்கலாம், ஆண்டவர் நம்மை மன்னிப்பார் என்கின்றனரே? இது சரியா வேதத்தின் படி விளக்கவும்.

#555 - *சூழ்நிலை நிமித்தம் விக்கிரகங்களுக்கு முன்பாக வணங்கலாம், ஆண்டவர் நம்மை மன்னிப்பார் என்கின்றனரே? இது சரியா?* வேதத்தின் படி விளக்கவும்.

இந்த வசனத்தை மேற்கோள் காட்டுகின்றனர் : ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக, என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுள்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும், இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான். 2 இராஜாக்கள் 5:18

*பதில்*
எந்த ஒரு சூழ்நிலை எனக்கு வந்தாலும் - வைராக்கியமாக அந்த தருணத்தை ஆண்டவருக்கென்று பயன்படுத்துவேன் என்று என் சிறுவயதிலிருந்தே பல நேரங்களில் கற்பனை செய்து நான் பார்த்த சம்பவங்களில் இதுவும் எனக்கு மிகவும் பிடித்த வசனபகுதிகளில் ஒன்று.

சரீரத்தில் அருவருக்கத்தக்க குஷ்டம் இருந்த போதும் கர்வம் நிறைந்தவனாக நாகமான் எலிசாவை பார்க்க வந்தார் (2இரா 5:11-12)

கீழ்படியாதவனாக கோபத்தோடு திரும்பும் வேளையில் தன் *வேலைக்காரரின்* வேண்டுதலுக்கு இணங்கி நாகமான் தன் மனநிலையிலிருந்து இறங்கி வந்தார் என்று படிக்கிறோம் – 2இரா 5: 12-14

தேவ மனுஷனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து யோர்தானில் 7 தரம் மூழ்கிய போது அவன் சரீரத்தின் குஷ்டம் நீங்கி சிறுபிள்ளையின் மாம்சம் போல (2இரா 5:14) ஆனதை நாகமான் கண்டபோது – மனமாற்றம் அடைந்தார்.
யார் உண்மையான தெய்வம் என்பதை அறிந்தார்.
யாரிடத்தில் வல்லமை இருக்கிறது என்று உணர்ந்தார்.
விக்கிரக ஆராதனை தவறு என்பதை தெரிந்து கொண்டார்.

அந்த சந்தோஷமான வேளையில் எடுத்த உன்னதமான தீர்மானத்தை கவனியுங்கள் :

1- இஸ்ரவேல் தேவன் ஒருவரே கடவுள் என்பதை தீர்மானம் பண்ணினார்.

2- பூமியெங்கும் வேறு எவறும் தெய்வம் இல்லை என்பதை பிரகடனம் பண்ணினார். (2இரா 5:15)

3- தன் நாட்டில் போய் உண்மையான தேவனுக்கு காணிக்கை செலுத்தும்படிக்கு ஒரு பலிபீடத்தை கட்ட பிரியப்பட்டார் - 2இரா 5:17

4- அந்த பலிபீடம் கட்டுவதற்கு விக்கிரகம் நிறைந்த அந்த ஊர் மண்னினால் கட்டாமல் இஸ்ரவேலின் மண்னினால் கட்டவேண்டும் என்று 2 கழுதை சுமக்கும் மண்னை தன் ஊருக்கு எடுத்து செல்கிறார் - 2இரா 5:17

5- அது மாத்திரமல்ல அந்த சந்தோஷமான சூழ்நிலையிலும் – விக்கிரகத்திற்கு அல்லது விக்கிர கோவிலுக்கு முன்னதாக தன் *தலையை கூட சாய்க்க கூடாது* என்ற வைராக்கியத்தை தீர்மானமாக எடுத்தது தான் நாம் அறிய வேண்டிய பாடம் – 2இரா 5:18.  

எப்படியென்றால் இந்த பராக்கிரமசாலியாகிய நாகமான் தன் எஜமானுக்கு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறவர் (2இரா 5:1)

அவர் வெளியே போகும் போது அல்லது தங்கள் தெய்வத்தை கும்பிடும் படி கோவிலுக்கு போனாலும் நாகமானை கூட்டி செல்வது வழக்கமாக இருந்ததால் – எஜமானோடு உள்ளே போகும் போது நான் அவருக்குக் கைலாகு (உதவியாக கைபிடித்து தூக்கி விடுவது) கொடுக்கும் போது என் சரீரம் வளைய வாய்ப்பு உள்ளது. அந்த வேளையில் தன் சரீரமோ தலையோ குணிய வேண்டி வந்தால் அதை விக்கிரகத்திற்காக நான் தலை வணங்கியதாக நினைத்துவிட வேண்டாம் என்கிறார் !!!   எழுதும் போதே எனக்கு உற்சாகமாக இருக்கிறது.

அல்லேலூயா – நம் தேவன் எவ்வளவு மகத்துவமுள்ளவர்.

வசனத்தை தியானிக்காமல் கேட்காமல் ஆலயத்தில் காலடி கூட எடுத்து வைக்காத இந்த நாகமானின் இப்பேற்பட்ட மனமாற்றம் - எப்போதும் வேதத்தை கையில் ஏந்தி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்று எப்போதும் உச்சரிப்பவர்களிடம் இல்லாமல் போனது வேதனை. ஆதார வசனங்கள் கீழே :

1கொரி 8:10-12 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?   பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.  இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.

1கொரி 10:25-29 கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை.  பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது.  அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. உன்னுடைய மனச்சாட்சியைக்குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக்குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன?

2கொரி 6:14-18 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?  கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?  தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.  ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.  அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 

விக்கிரகம் ஒரு பொருட்டே அல்ல (1கொரி 8:4)

வலுக்கட்டாயமாக ஒருவர் பூசிவிட்டதாலே எந்த வல்லமையும் தேவ ஜனங்களை மேற்கொள்ளாது (ஏசா 40:17)

காரியம் என்னவென்றால் தங்கள் செய்கைகள் மற்றவர்களுக்கு தடுக்கலாக இல்லாமல் இருப்பதே முக்கியம் (1கொரி 8:9)

இயேசுவின் நாமத்தைக்குறித்து பேசவும் போதிக்கவும் கூடாதென்று அதிகாரிகள் கட்டளையிட்டபோது தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள் என்றனர் பேதுருவும் யோவானும். அப் 4:18-19

நாகமான் தலையை எந்த சூழ்நிலையிலும் தன் தலை சாயவிடாமல் பார்த்துக்கொண்டார். அப்பேற்பட்ட விசுவாசம் நமக்காக அடிக்கப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் மரித்து விலையேறப்பட்ட பரலோக வாசலண்டை நம்மை சேர்க்கும் இயேசுவிற்காக விக்கிரகங்களுக்கு முன்னதாக தலை வணங்கலாம் என்று சொல்பவர்கள் வேஷக்காரர்கள்.

இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் எடுத்ததால் வந்த இந்த வீழ்ச்சியில் இருக்கும் இந்த ஜனங்கள் மீண்டு வெளியேறி வசனத்தை விசுவாசித்து மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்று இரட்சிக்கபட்டால் சீர்படும்!!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக