சனி, 14 செப்டம்பர், 2019

#467 - சபை ஊழியர்கள் வேலை செய்து கொண்டு ஊழியம் (சபை) நடத்தக்கூடாது என்றும் அப்படி சபை நடத்தும் ஊழியர்கள் சாத்தானுக்கு ஊழியம் செய்வதாக கூறுவது சரியா,?

#467 - *சபை ஊழியர்கள் வேலை செய்து கொண்டு ஊழியம் (சபை) நடத்தக்கூடாது என்றும் அப்படி சபை நடத்தும்  ஊழியர்கள் சாத்தானுக்கு ஊழியம் செய்வதாக கூறுவது சரியா?*
 
பவுல், போன்றவர்கள் வேலை செய்து கொண்டு ஊழியம் செய்வதாக வேதம்  கூறுவது சரியா தவறா விளக்கம் தரவும்

*பதில்* :

முதலாவது பதங்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

மூப்பர்களாகவோ (Elders) மேய்ப்பர்களாகவோ (Pastors) கண்காணிகளாகவோ (Bishops) இருப்பவர்கள் பிரசங்கியாளராக (Preachers) இருக்க முடியும்.

ஆனால் பிரசங்கியாளர்களாக (Preachers) போதகர்களாக (Teachers) இருப்பவர்கள் மூப்பர்களாகவோ மேய்ப்பர்களாகவோ கண்காணிகளாகவோ இருக்க வேண்டிய வேத சட்ட முறைக்கு உட்பட்ட கட்டாயத்தில் இல்லை.

காரணம் மூப்பர்களாகவோ மேய்ப்பர்களாகவோ கண்காணிகளாகவோ இருப்பவர்கள் ஆண்களாகவும் (பெண்கள் அல்ல) வயதில் மூத்தவர்களும் திருமணம் ஆனவர்களும் (ஒரே மனைவியுடையவர்கள் மாத்திரம்) அவர்களுக்கு பிள்ளைகளும் அந்த பிள்ளைகள் நல்லொழுக்கத்திலும் இருத்தல் அவசியம் (1தீமோ. 3:1-5)

பிரசங்கியாளர்கள் (Preachers) போதகர்கள் (Teachers) மற்றவர்களை காட்டிலும் வயதில் மூத்தவர்களாக இல்லாமலும் இருக்க வாய்ப்புள்ளது.

எந்த ஒரு சபைக்கும் ஒற்றை தலைமையை வேதம் அங்கீகரிக்கவில்லை. மூப்பரோ கண்காணியோ மேய்ப்பரோ அனைத்தும் புதிய ஏற்பாட்டில் ஒருமையில் அல்ல பன்மையாகவே சொல்லப்பட்டிருக்கிறது.

மேலும் மூப்பரோ கண்காணியோ மேய்ப்பரோ இப்படிப்பட்ட எந்த வார்த்தையும் தனி தனி பதவியை அல்ல..... மூன்றும் ஒரு பதவியையே குறிக்கிறது !!! (அப். 20:17, 28).

எங்கோ ஒரு சர்டிஃபிகேட்டை வாங்கி கொண்டு ஒரு ஆள் தன்னை பாஸ்டர் என்று சொல்லி ஒரு கூட்டத்தை கூட்டி வைத்து சபை என்று அங்கீகரித்து கொள்வதை வேதத்தின் படி சரியல்ல. பாஸ்டர் என்றால் தமிழில் மேய்ப்பர் அல்லது மூப்பர் என்று பொருள். (அப். 20:28)

மேலும் ஒருவர் வேதத்தை கற்று வந்ததும் ஊழியம் செய்ய வேண்டும் என்று ஒரு கூட்டத்தை ஆரம்பிக்க கூடாது. அவர் வேறொருவருடன் சேர்ந்து ஊழியத்திலும் போதகத்திலும் அநுபவம் பெற வேண்டும். *புதிய சீஷனாக இருக்கக் கூடாது* என்று வேதம் கற்பிக்கிறது (1தீமோ. 3:6-7)

*சபை என்பது பிசினஸ் நடத்துவது அல்ல*.
அப்பா பிஸினசை பிள்ளை நடத்தவேண்டும் என்று அவசர அவசரமாக ஏதாவதொரு பைபிள் காலேஜில் போய் அல்லது 3 அல்லது 6 மாதம் தபாலில் படித்துவிட்டு சான்றிதழுடன் மேடையில் ஏறி வார்த்தையும் சத்தியமும் அறியாமல் தத்துபித்து என்று பேச ஆரம்பித்து அநுபவத்தையும் தன் திறமையையும் மேம்படுத்துவதற்கு இது ஒரு சமுதாயக்கூடமோ, முதலாளித்துவம் காண்பிக்க கம்பெனியோ அல்ல. தேவனுடைய வேலை. மேடை ஏறுபவர்கள் - தங்கள் வாயினின்று வரும் வார்த்தைகள் சத்தியத்தின்படி இல்லையென்றால் அது அவர்களுக்கு ஆக்கினையை (தண்டனையை) வருவிக்கும் என்பதை மறந்து போகக்கூடாது. யாக். 3:1

இப்படிபட்டவர்கள் பணம் வசூலிக்கும் முதலைகள் என்பதை சொல்ல நமக்கு தயக்கம் வருமா என்ன? பண முதலைகள் தான் !!

*வேறு வேலை செய்து கொண்டே ஊழியர்கள் ஊழியம் செய்யலாமா*?
வேலை செய்ய மனதில்லாதவன் சாப்பிடவும் கூடாதென்கிறது வேதம். (2தெச. 3:10-12). காணிக்கையே குறியாக இருந்து எப்போதும் தங்கள் சபையை கறவலாடுகளாக மாற்றிவிடுவார்கள். தங்கள் சொந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறார்கள் (2தெச. 3:12)

பிரசங்க மேடையில் நிற்பவர்கள் தங்கள் பேச்சில் மாத்திரம் அல்ல தங்கள் வாழ்க்கையிலும் நடக்கையிலும் முன்னுதாரணமாக இருத்தல் அவசியம் (2தெச. 3:7, 1கொரி. 9:6)

ஆனால் முழு நேரமும் ஊழியர் தங்கள் சபை பணியில் இருக்க வேண்டிய அவசியம் இருக்கும் பட்சத்தில் அந்த சபையார் அந்த ஊழியரின் தேவையை சந்திக்க கடமை பட்டிருக்கிறார்கள். 1கொரி. 9:7-8

மத். 6:24ல் நாம் பார்க்கும் வசனம் “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது”.

*மம்மோனாஸ் என்ற கிரேக்க வார்த்தையின் தமிழ் அர்த்தம் விக்கிரகம்* என்பதை உலகப்பொருள் என்று இந்த வசனத்தில் குறிப்பிடுகிறார்கள். ஆங்கிலத்தில் You cannot serve God and mammon என்று அழகாக இதை மொழிபெயர்த்திருக்கிறார்கள். *Mammon என்றால் விக்கிரகம்*.

எந்த ஒரு மனுஷனும் தேவனுக்கும் விக்கிரகத்திற்கும் ஊழியம் செய்ய முடியாதே. இந்த வசனம் உலக வேலையை குறிக்கவில்லை. ஆகவே, மனிதர்களை தவறாக வழிநடத்திச்செல்லாத எந்த சரியான நேர்த்தியான வேலையையும் பார்த்துக்கொண்டே ஊழியத்தை செய்வது அவசியம்.

நிச்சயமாக வயதும் திராணியும் சரீர பெலமும் உள்ளவர்கள் தங்கள் சொந்த வேலையை செய்து கொண்டு ஊழியம் செய்யவே வேதம் கற்றுக்கொடுக்கிறது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக