செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

#363 - நாம் ஏன் ஓய்வுநாள் ஆராதனைக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் கூடி வருகிறோம்?

#363 - *நாம் ஏன் ஓய்வுநாள் ஆராதனைக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் கூடி வருகிறோம்?

2)பழைய ஏற்பாட்டில் சனிக்கிழமையாக இருந்த ஓய்வுநாள் எப்படி, இன்று ஞாயிற்றுக்கிழமையாக மாறியது ?

3)இன்றும் யூதர்கள் தங்கள் ஓய்வுநாளை சனிக்கிமையில் தான் ஆசரிக்கிறார்களே !...

4)ஏழாம் நாள் ஓய்வுக்காரர்களுக்கு (Seventh Day Adventist) நாம் அளிக்கும் பதில் என்ன ?...

5)ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை இல்லாத சவுதி போன்ற நாடுகளில் அங்குள்ள விடுமுறை நாட்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் ஓய்வுநாள் ஆசரிப்புக்காக, (வெள்ளிக்கிழமை-அங்கு வார விடுமுறை நாள்) சபை கூடி வரலாமா ?....

இதை குறித்த புதிய ஏற்பாட்டின் வசனத்தின் அடிப்படையிலான தெளிவான விளக்கம் வேண்டும் சகோதரர்களே ?....

*பதில்* :
1)*நாம் ஏன் ஓய்வுநாள் ஆராதனைக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் கூடி வருகிறோம்*?

கிறிஸ்தவர்கள் – தாங்கள் கூடுவது ஓய்வு நாளில் *அல்ல* என்பதை *அறியாமல்* கூடுகிறார்கள்.  ஓய்வு நாள் என்பது சனிக்கிழமை.

செபா என்ற எபிரேய / அரபு வார்த்தைக்கு -  7 என்று பொருள்.
செபத் என்றால் 7ம் நாள் – அதை ஓய்வு நாளாக பிதாவானவர்
ஓய்வு நாளாக கடைபிடிக்கும்படி இஸ்ரவேலருக்கு கட்டளையிட்டார். (யாத். 20:2, 10)

ஓய்வு நாளில் வேலை செய்பவன் *கொலை செய்யபடவேண்டும்* என்பது தேவனுடைய கட்டளை - ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலை செய்யப்பட வேண்டும்.  (யாத். 31:15)

நியாயபிரமாணம் இப்பொழுதும் உண்டு என்பவர்கள் இதை இன்று கடைபிடிப்பார்களா?  நிச்சயமாக முடியாதே !! அவசியத்துக்கு இங்கொன்றும் அங்கொன்றும் 613 கட்டளைகளிலிருந்து வேண்டியதை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிட்டால் – சாபம் தேடி வருமே (ரோ. 2:23, 25, யாக். 2:9, 10, 11)

எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான் (யாக். 2:10)

நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே (கலா. 3:10).

2)*பழைய ஏற்பாட்டில் சனிக்கிழமையாக இருந்த ஓய்வுநாள் எப்படி, இன்று ஞாயிற்றுக்கிழமையாக மாறியது*?

மோசேயின் பிரமாணத்தை நிறைவேற்றி, சிலுவையில் அந்த பிரமாணத்தை ஆணியடித்து முடித்து வைத்த கிறிஸ்து – தன் புதிய பிரமாணத்தை ஏற்படுத்தி வாரத்தின் முதல் நாளில் உயிர்தெழுந்ததினால் – கிறிஸ்தவர்கள் கீழ்கண்ட காரணங்களை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகிறோம். (கொலோ. 2:14, லூக்கா 22:20)

1-இயேசு கிறிஸ்து  உயிர்தெழுந்த நாள். மாற்கு 16:9

2-உயிர்தெழுந்த பின் பரமேரும் முன்னர் 6 முறை தரிசனமான நாட்கள். மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக். 24:34; 24:13-15; 33,36, யோ. 20:19; 26

3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேரும் நாளுக்கும் இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது. யோ. 20:19, 26, அப். 2:1

4- சபை ஸ்தாபிக்கப்பட்டது அப். 2:1

5- பரிசுத்த ஆவியானவர் இறங்கின நாள் அப். 20:1-4

6-அப்பம் பிட்கும்படி கூடினார்கள் அப். 20:7

7- காணிக்கை சேர்க்கும்படி கூடினார்கள். 1கொரி. 16:1-3


3)*இன்றும் யூதர்கள் தங்கள் ஓய்வுநாளை சனிக்கிமையில் தான் ஆசரிக்கிறார்களே* !

ஆம் – மோசேயின் மூலமாக அவர்களுக்கு கொடுக்கப்ட்ட சட்டம் முடிவுற்றதை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் – இன்னமும் முரட்டாட்டத்தில் இருக்கிறார்கள் (எரே. 31:31, யோ. 1:11, அப். 21:21)


அவர்களுடைய முரட்டாட்டம் *நம்மை போன்ற புறஜாதியினருக்கு லாபம் – மிக சீக்கிரமாக அந்த காலத்தை இரட்சிக்கப்படாத புறஜாதியாருக்காக நாம் பயன்படுத்த வேண்டும்* (ரோ. 11:25)

4)*ஏழாம் நாள் ஓய்வுக்காரர்களுக்கு (Seventh Day Adventist) நாம் அளிக்கும் பதில் என்ன* ?...
 
*அறியாமையின் உச்சம்* !!

மோசேயின் பிரமாணம் – இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்டது.

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் *இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன்* என்றார் (யாத். 34:27)

இந்தியாவில் இருந்து கொண்டு துபாய் சட்டத்தின்படி நான் வாகனம் ஓட்டுவேன் என்று என்று இந்தியாவில் தங்கியிருக்கும் ஒரு துபாய்க்காரர் இந்திய தெருக்களில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்பட்டதாக – நீதிமன்றத்தில் சொன்னால் – அதிகாரிகள் அனுமதிப்பார்களா? தண்டனை நிச்சயமாயிற்றே !!!

Seventh Day காரர்கள் தங்கள் கொள்கையை விட்டு கிறிஸ்தவத்திற்கு திரும்ப வேண்டும்.

5)*ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இல்லாத சவுதி போன்ற நாடுகளில் அங்குள்ள விடுமுறை நாட்களில் கிறிஸ்தவர்கள் தங்கள் ஓய்வுநாள் ஆசரிப்புக்காக, (வெள்ளிக்கிழமை-அங்கு வார விடுமுறை நாள்) சபை கூடி வரலாமா*?....

கிறிஸ்தவர்கள், தேவனை தொழுது கொள்ளும்படி *வேதத்தின்படி* வாரத்தின் முதல் நாளில் தான் கூட வேண்டும்.

பகலில் வேலைக்கு சென்று விட்டு இரவிலோ அல்லது விடியற்காலையிலோ வளைகுடா நாடுகளில் கூடுகிற கிறிஸ்தவர்கள் அநேகர் உண்டு.

நானும் மஸ்கட்டில் இருந்த நாட்களில் – வெள்ளிக்கிழமை நாங்கள் பொதுவாக கூடினாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவனை ஆராதிக்க / தொழுது கொள்ளக் கூடி வந்தோம் !!
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H

*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக