திங்கள், 10 ஜூன், 2019

#219 - பிரிந்த சபையின் ஒரு வாலிபன் பிரிந்து பிரிந்து போனவர்களை வழிநடத்தலாமா?

#219 - *பிரிந்த சபையின் ஒரு வாலிபன் பிரிந்து பிரிந்து போனவர்களை வழிநடத்தலாமா?*

சபையிலுள்ள விசுவாசி ஊழியருடன் ஏற்பட்ட மனகசப்பால் ஒரு குடும்பத்தார் தனியே சென்று வீட்டிலே அவர்களால் ஆன ஊழியத்தை செய்து ஞாயிறு தொழுகை செய்கின்றனர். ஒரு 20/25 பேர் கூடுகிறார்கள்.

அதே பிரிந்து சென்ற சபையில் உள்ள, பைபிள் காலேஜில் படித்த ஒரு வாலிபன் வந்து இவர்கள் தனியே கூடும் சபையை நடத்த அழைக்கிறார்கள். அப்படி போய் ஊழியம் செய்யலாமா?

இந்த சபையில் அந்த வாலிபனை ஊழியர் அவ்வளவாய் ஊழியத்தில் பயன்படுத்துவதில்லை. மாறாக ஆராதனையில்கூட வேதஆராய்ச்சி நடத்தக்கூட விடுவதில்லை.

ஆனால் இங்கோ ஊழியம் செய்ய முறைப்படி வசனத்தைப்போதிக்க அந்த வாலிபனின் உதவி தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை. அந்த வாலிபனை  அனுப்ப ஊழியருக்கு மனவரவில்லை. மாறாக அவர்களுடன் பேச்சு வழக்கு கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு என்ன பதில் கூறுவது? (வசனத்தின்படி)

பதில்:

1)
சபையாரில் சிலருக்கு மனவருத்தம் இருக்கும் பட்சத்தில் அந்த சபையின் மூப்பர்களிடத்தில் முறையிட வேண்டும். அவர்கள் எது சரி எது தவறு என்று ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள் (தீத்து 1:9). மூப்பர்கள் சபையை நிர்வகிப்பவர்கள் ஆயிற்றே... 1பேதுரு 5:2 

இந்த முறையை பின்பற்றி வெளியேறினார்களா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை.

தேவனை தொழுது கொள்ளும்படி கூடும் சபையானது அன்பிலும் நற்பண்புகளிலும் கவனித்து வளர வேண்டும் என்று வேதம் சொல்கிறது (எபி 10:24).

இவை இரண்டும் அந்த கூடுகையில் இல்லாமல் வெளியே போனார்களாகில் – அடிப்படையில் பிழை உள்ளது.

2)
பிரிந்து போனவர்கள் – எப்படி தங்கள் விசுவாசத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள முடியும். எப்போதும் விரோதம் இருக்குமே? சகோதரன் என்று எவ்வாறு விட்டு வந்த சபையில் உள்ளவர்களை அழைக்கமுடியும்?   பகை உணர்வோடு பரலோகத்தின் உள்ளே போவது கேள்வியாகி விடுமல்லவா?

தனியே ஊழியம் செய்ய விருப்பமிருந்தால் – எல்லாரிடமும் நேரிடையாக சமாதானமாக பேசுவது அவசியம்.

பவுலும் பர்னபாவும் – மாற்கு என்கிற சீஷன் நிமித்தம் கருத்து வேறுபாட்டில் பிரிந்தார்கள் – ஆனால் மறுபடியும் ஒன்று சேர்ந்தது மாத்திரமல்ல – யாரால் பிரிந்தார்களோ அவன் தன் ஊழியத்தில் மிகவும் பிரயோஜனமானவன் என்று பவுல் குறிப்பிடுவது எவ்வளவு பொிய பாடம் நமக்கு (அப். 15:39, 2தீமோ. 4:11)

சகோதரருக்குள் கருத்து வேறுபாடு வந்தால் அதை உடனே சரி செய்ய வேண்டும் இல்லாவிடில் – அவரவர் நீதியே கேள்விகுறியாகிவிடுகிறது (யாக். 5:16)

3)
வாலிபன் என்று சொல்வதால் பைபிள் காலேஜ் முடித்திருந்தாலும் அவருக்கு அநுபவம் அவசியம்.

புதியவர்களாக இருக்ககூடாது (1தீமோ. 3:6)

அநுபவம் மிக்கவர் போதிப்பது சபைக்கு ஆரோக்யம். சபையின் சிக்கல்கள், விவாதங்கள், விபரீதங்கள், விபசாரங்கள், தவறான போதனையை சந்தித்தல்,   பாலியல் ரீதியான பிரச்சனைகள், பிரசங்க இடையூறுகள், உறுப்பினர்கள் வெளியேற்றப்படுதல், பலவீனமான மூப்பர்களை சமாளித்தல், அதிகப்படியான சபை பாகுபாடுகளை கண்டறிதல், போன்ற இன்னும் அநேக வகைகளில் அநுபவம் காலபோக்கில் பெற்றுக்கொள்வது அவசியம். இந்த விதமான அநுபவங்கள் இல்லாமல் ஒருவரை நியமிக்கும் போது – ஆலோசனை குறையும். வளர்ச்சி குன்றும்.

சபையாருக்கு வேண்டிய சகல வகையான ஆலோசனையை கொடுக்கும் படி சகலவற்றிலும் தேவன் ஊழியரை பக்குவப்படுத்துகிறாராம் (2கொரி 1:4)

வாலிபர்கள் தங்கள் நேரம் (அநுபவம்) வர காத்திருக்கவேண்டும் (1பேதுரு 5:5-6)

நன்றி

 *எடி ஜோயல் சில்ஸ்பி*
 ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக