சனி, 12 நவம்பர், 2022

#1157 - எங்களைப் போன்ற வளரும் ஊழியர்களுக்கு உங்களது ஆலோசனைகளை தரலாமே? கர்த்தருக்குள் இன்னும் எப்படி அதிகமாய் வளருவது?*

#1157 - எங்களைப் போன்ற வளரும் ஊழியர்களுக்கு உங்களது ஆலோசனைகளை தரலாமே? கர்த்தருக்குள் இன்னும் எப்படி அதிகமாய் வளருவது?* தங்களை தேவன் நேரடியாக அழைத்தார் என்றும் நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட கர்த்தருடைய ஊழியர்கள் என்றும் பலர் சொல்கிறார்களே? இவர்கள் பல நேரங்களில் தங்கள் சபையாரையும் மற்ற ஊழியர்களையும் துச்சமாய் நடத்தும்போது தேவன் உண்மையாகவே இவர்களை தெரிந்தெடுத்தாரோ என்ற சந்தேகம் உள்ளது. உங்களது கருத்துக்களை கூறவும்.

*பதில்* : சுய கருத்துக்களை பரிமாறுவதில்லை. நமது கேள்விக்கு *வேதாகமம் என்ன பதில் தருகிறது* என்பதை காண்பதே நமது குழுவின் நோக்கம்.

சுமார் 30 வருடங்களுக்கு குறையாமல் ஊழியத்திலிருக்கும் நான், ஊழியர்களான எனது தந்தை Dr. M. Silsbee, அவரது அப்பாவும் எனது தாத்தாவுமான திரு. Charles Manuel Stephens மற்றும் எனது தாத்தாவின் அப்பாவும் எங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறை கிறிஸ்தவரும் எனது பூட்டனாருமான திரு. Stephens Raju அவர்களது குடும்ப வளர்ப்பிலும் நினைவிலும் கண்டிப்பிலும் ஒழுக்கத்திலும் கிறிஸ்துவின் போதனையிலும் வளர்ந்ததால் உங்களது இந்த காரியத்தை வேதவசனங்களின் அடிப்படையில் எழுதுகிறேன்.

ஊழியம் என்ற தமிழ் வார்த்தைக்கு வேலை என்பது வழக்கச்சொல். ஊழியக்காரர் என்றால் வேலைக்காரர் என்பதே.

நீதிமன்றத்தில் சாதாரன டவாலியாக வேலை செய்தாலும் நீதிபதிக்கு கையாளாயிருப்பதால் அந்த டவாலியானவர் தன்னை நீதிபதியாக நினைத்து செயல்படமுடியாது! நீதிபதிக்கு அருகாமையில் இருப்பதால் மக்கள்  தனக்கு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை மறந்து டவாலி தன்னை ஒருபோதும் நீதிபதியாக நினைத்துக்கொள்ளவோ அதிகாரம் செலுத்தவோ முடியாது. அதை நீதிபதி அறிந்தால் அந்த க்ஷனமே இவரது வேலையே பறிபோகும் !!

*கர்த்தருக்கு ஊழியம் செய்வதென்பது ஒரு கவுரவ வேலை. அதாவது லாபம் ஈட்டும் தொழிலோ அல்லது கர்த்தரிடமிருந்து மாத சம்பளம் பெறும் பணம் சம்பாதிக்கும் வேலையுமல்ல*.

ஆனால், முறையற்ற வகையில் கர்த்தருடைய ஊழியத்தை செய்தால் அதற்கான தண்டனை தானாய் தேடிவந்து சேரும். “என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. யாக். 3:1” இந்த வாக்கியம் ஊழியர்களாகிய நமக்கு ஒரு எச்சரிப்பின் வசனம்!

தேவனுக்கு ஊழியம் செய்வதென்பது தொழில் அல்ல. அது அற்பணிப்பு. இதை குறித்து அப். பேதுரு சொல்வதை கவனியுங்கள்: 2பேதுரு 2:3 ”பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது”

ரோமர் 16:18ல் அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள் என்று பவுல் எழுதுகிறார்.

மேலும், தேவபக்தியை ஆதாய தொழிலாக செய்பவர்களை விட்டு விலகு என்று எச்சரிப்பதையும் நாம் கவனிக்க தவறகூடாது. 1தீமோ. 6:5

ஊழியம் செய்வதின் மூலம் பணத்தை ஈட்டுவதில் குறியாக இருத்தல் கூடாது. (எபி.  13:5)

ஊழியர்கள் தங்களது குடும்பத்திற்கு தேவையானதை உழைத்து சம்பாதிக்க வேண்டுமேயன்றி ஊழியத்தில் பணம் சேர்க்கவேண்டும் என்பது தவறு. 2தெச. 3:10, 1தீமோ. 3:4-5

எதிர்காலத்திற்கு அவசியமானதை செய்ய வேண்டியது அவசியம். நீதிமொழிகள் 6:6- 8

*ஊழியர்கள் எஜமானர் அல்ல*.
தான் ஊழியம் செய்யும் பிராந்திய சபையிலுள்ள சபையினர் தனக்கு கட்டுபட்டு தனது சொற்படி அனைவரும் தனக்கு பயந்து தனது மக்கள் தனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் இருக்க கூடாது. சபையினருக்கு தான் எஜமானர் போல ஊழியர் தன்னை நினைத்துக்கொள்ள ஏதுவில்லை. மத். 20:28

இப்படிப்பட்ட குணாதியங்களையுடைய நபர்களை (பரிசேயர்களை) குறித்து இயேசு கிறிஸ்துவின் சாட்டையடிகளான வசனங்கள் மத்தேயு 23ல் காண முடிகிறது:  மத்.  23:4-13 “சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.”

சபையில் செய்தி கொடுக்க வாய்ப்பு கிடைத்து கொஞ்சம் வளர்ந்ததுமே தான் மற்றவர்களை விட பரிசுத்தவான் என்ற எண்ணம் சுயத்தில் தலைதூக்க அனுமதிக்க கூடாது.

சபையின் அனைத்து முடிவுகளும் தன்னை கேட்டு எடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு வந்து விடுவது ஆபத்து. முடிவுகளை அந்தந்த சபையின் மூப்பர்கள் எடுக்கிறார்கள். அப். 20:28

ஊழியர்கள் தாழ்மையான வேலைக்காரன். தேவ கிருபையால் காப்பாற்றப்பட்ட ஒரு பாவி என்பதை உணர்ந்து அமைதலாகவும் பொறுமையாகவும் அதிகாரத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும். 1தீமோ. 1:15

வெளிப்படையாக, சிறிய சபைகளில் ஊழியரே பல பாத்திரங்களை வகிக்க வேண்டிய சூழ்நிலைகள் உள்ளன. பாடலை வழிநடத்துவதும், கர்த்தருடைய பந்தியை தயாரிப்பதும், வளாகத்தை சுத்தம் செய்வதும், மேஜைகள் நாற்காலிகள் மற்றும் தரை விரிப்புகளை போடுவதும், ஜெபத்தை நடத்துவதும், குடும்பங்களை சந்திப்பதும், வியாதியஸ்தர்களை போய் விசாரிப்பதும், ஜெப தேவைக்கென்று அழைப்பவர்களை போய் சந்தித்து ஜெபிப்பதுமான பல வேலைகள் எப்போதும் செய்ய கடமையுள்ளது.

பல நேரங்களில் சொந்த காரியங்களில் கூட ஈடுபடமுடியாமல் அவசியமானதை தவிர்த்து சபையாரின் அழைப்பினால் ஓடிக்கொண்டேயிருக்கும் ஊழியம் அதிகம்.  சபையாருக்காக ஊழியர் ஜெபிக்கிறார். ஆனால் ஊழியரின் தேவைகளையும் மனநலத்தையும் குடும்ப நெருக்கங்களையும் சூழ்நிலையையும் எவரும் கருத்தில் கொள்வதில்லை. சில நேரங்களில் வீட்டில் சுகவீனமாய் உள்ள மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நேரமில்லாமல் சபையில் ஒருவர் தனது பிள்ளையின் பிறந்த நாளுக்காக வைத்த ஜெப கூடுகையில் ஐந்து மணிநேரம் உட்கார வேண்டிய சூழ்நிலையும் பலர் சந்திக்காமல் இல்லை!!

சபையில் எடுக்கும் தீர்மானங்களில் தன்னை கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றும் தனக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்றும் நினைப்பவர்கள் முதலாவது சபையின் அவசியமான எந்த வேலையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டியது அவசியம். ஒரு ஞாயிறு போனால் மறு ஞாயிறு வரைக்கும் காணாமல் போன ஆட்டைபோல இருந்தாலும் சபையில் தன்னை முதன்மை படுத்தவேண்டும் என்ற எண்ணம் வருவது தவறு. யோ. 13:14, மத். 20:27; 18:4; மாற்கு 9:33-35; லூக்கா 22:26; அப். 20:34-35; ரோ. 1:14; 1கொரி. 9:19-23; 2கொரி. 4:5, 11:5, 11:23-27, 12:15 (குறிப்பு வசனங்களை வேதாகமத்தை ஒப்பிட்டு படிக்கவும்)

மூப்பர்கள் இல்லாத பட்சத்தில், தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதற்கு ஊழியர்களுக்கு சோதனை வலுவாக இருக்கலாம்.

வளர்ந்து வரும் பெரிய சபைகளில் ஒரு கவர்ந்திழுக்கும் ஊழியர் மீது கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வழிபாட்டு முறை போன்றவை. இந்த ஊழியர்கள் தங்களை மிகவும் முழுமைப்படுத்திக் கொள்வதால் அவர்கள் ஒரு பெரிய வீழ்ச்சிக்கு தங்களை அமைத்துக் கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. பாலியல் ஒழுக்கக்கேடு, சபையின் நிதி விதிமீறல்கள் மற்றும் சர்வாதிகார பாணியில் நடக்கும் செயல்கள் ஒரு பட்சத்தில் வேதாகமத்தின் வசனங்களை அங்கொன்றும் இங்கொன்றும் எடுத்து தனக்கு சாதகப்படுத்திக்கொண்டு சுய வாழ்வில் ஒழுக்கமின்மை அதிகரித்து ஒரு நிர்வாகியாக தன்னை வளர்த்திக்கொள்வதால் அந்த பிராந்தியமே சீர்கெடும்.

சபையிலுள்ள மற்ற வளர்ந்தவர்களை அல்லது இளைஞர்களை பிரசங்கிக்க வளர்ப்பதும் கற்பிப்பதும் போன்ற பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வது அவசியம். தானே அனைத்தையும் செய்யவேண்டும் என்பதும் தன்னை கேட்காமல் எதையும் செய்யக்கூடாது என்ற மனநிலையும் வேதத்தின்படி முறையானது அல்ல.

சபை என்பது ஒருவரது கட்டுபாட்டில் இயங்குவதல்ல. சபையின் நிர்வாகம் எவ்வாறு வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பதை அறிய நமது கேள்வி பதில் எண் #1063ஐ காணவும்.

*ஊழியர்களுக்கு தாழ்மை அவசியம்*.

Father என்றும் பாஸ்டர் என்றும் போதகர் என்றும் அழைக்கபடவேண்டும் என்று வலியுறுத்துகிறவர்களும் எதிர்பார்க்கிறவர்களும் விரும்புகிறவர்களும் வேதாகமத்தின்படி முறையானவர்கள் அல்ல என்பதையறியவேண்டும். மத். 23:8

மேலும் சிலர் மருத்துவப் பட்டம் அல்லது கல்விப் பட்டம் இல்லாவிட்டாலும் "டாக்டர்" என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள். !!??

மரியாதைக்கு தகுதியானவர் என்று உணர யாருக்கும் உரிமை இருந்தால், நாம் பவுலைப் பற்றி நினைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு அறிஞராக இருந்தார், கமாலியேலின் புகழ்பெற்ற பள்ளியிலிருந்து தெய்வீகத்தின் டாக்டர் பட்டம் பெற்றிருக்கலாம். மேலும் அவர் ஒரு அப்போஸ்தலராகவும் இருந்தார். ஒரு அப்போஸ்தலரின் அதிகாரத்தைக் கொண்டிருந்தாலும், ஒரு நபராக பவுல் மனத்தாழ்மை உணர்வை வெளிப்படுத்தினார். தீமோத்தேயு தனது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி சிந்தித்தபோது அவர் எழுதியதைக் கவனியுங்கள்: “பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்” 1தீமோ. 1:15 என்றார்.

*இதை குறித்ததான சில வசனங்களை கீழே பதிவிடுகிறேன்*:

மத். 5:5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்

மத். 18:4 … இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான்.

மத். 23:12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

1பேதுரு 5:6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.

தான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன் என்று கிறிஸ்து சொல்வதை கவனிக்கவேண்டும். மத். 11:29 “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்;… ”

மரியாதை என்பது மரியாதையைக் கோருவதிலிருந்து அல்ல, ஆனால் அதற்குத் தகுதியான வகையில் செயல்படுவதிலிருந்தே பெறப்படுகிறது!!

தவறாகப் புரிந்துகொள்பவர்களை அல்லது பாவத்தில் சிக்கியவர்களைத் திருத்துவதென்பது ஊழியரின் பொறுப்பு மட்டுமல்ல, மற்ற கிறிஸ்தவர்களுக்கும் உள்ளது. சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. கலாத்தியர் 6:1

தவறு செய்பவர்களை - செய்தவரின் முகத்தில் விரலை ஆட்டியபடி, கடுமையான முகத்துடனும், வலிமையான குரலுடனும் அணுகுவதென்பது பிழைகளைச் சமாளிக்க சிறந்த வழி அல்ல.  அவ்வாறு கடிந்து கொள்ளப்பட்டவர் இனி இங்கு மீண்டும் வருவதேயில்லை என்று சபதம் செய்து தேவனை விட்டே விலகிய சூழ்நிலைகளை நான் அறிந்திருக்கிறேன். மற்றவர்களை சரிசெய்வதான நினைத்து அவரது ஆத்துமாவையே நரகத்தில் தள்ளிவிடுவதற்கு நாம் காரணராகி விடக்கூடாது (மத்தேயு 18:6).

கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.  எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். 2தீமோ. 2:24-25

சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன வழியினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன். யாக்கோபு 5 :19-20

ஒருவரைத் திருத்தும் அணுகுமுறையின் காரணமாக ஒருவரை விரட்டியிருந்தால், மூன்று விஷயங்களை நாம் செய்ய வேண்டும் - அணுகுமுறையை மாற்றி, மன்னிப்புக்காக ஜெபித்து, விரட்டியடித்தவரிடம் மன்னிப்பு கேட்டு, அவர் திரும்பி வரும்படி பிரயத்தனம் செய்யவேண்டும்.

*மேலும், அப்போஸ்தலனாகிய யோவானின் ஒரு அனுகுமுறை நமக்கு பெரிய பாடம்:*
“3யோவான் 1:9-10 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்”

"ஜெப ஆலயங்களில் பிரதான இருக்கைகளை" விரும்பிய வேதபாரகர் மற்றும் பரிசேயர்களுக்கு எதிராக கிறிஸ்து பேசினார் (மத்தேயு 23:9). மோசேயின் தலைமைக்கு வெறுப்பாகத் தோன்றிய ஆரோனும் மிரியமும் தங்களுக்கென ஒரு முக்கிய இடத்தை விரும்பினர் (எண்கள் 12).

சில மனிதர்கள் சபையில் முதன்மையை விரும்புகிறார்கள். இது விசுவாச துரோகத்திற்கு வழிவகுக்கும். தேவன் நம்மை உயர்த்தும் வரை அடங்கியிருப்பது அவசியம். 1பேதுரு 5:5-6

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக