சனி, 13 நவம்பர், 2021

#1115 - கணவரை எப்படி தேர்ந்தெடுப்பது? 2வயது இளையவரைத் திருமணம் செய்யலாமா?

#1115 - *கணவரை எப்படி தேர்ந்தெடுப்பது? 2வயது இளையவரைத் திருமணம் செய்யலாமா?*

சபையில் உள்ள ஒரு இளம் பெண் தனக்கானத் துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது? நம் சபையை சார்ந்தவனாயிருந்தால் போதும் என திருமணம் செய்துக் கொள்ளலாமா? தன்னை விட 2 வருடம் சிறியவனாய் இருந்தாலும்  திருமணம் செய்து கொள்ளலாமா? பணக்காரனாயில்லாமல் இருந்தாலும் நல்ல வேலையில் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பது தவறா?

*பதில்* :  யாரை திருமணம் செய்வது என்று தீர்மானிப்பது கடினமான முடிவு. முக்கியமான முடிவு என்பதால் கவனமான தீர்மானம் அவசியமே.

ஏனென்றால் திருமணம் என்பது *ஆயுள் முடியும் வரை வாழ்நாட் காலத்திற்குமானது* ரோ. 7:2-3. ஒருவருக்கு ஒரேயொரு துணை மாத்திரமே வேதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகையால் அதிக கவனம் எடுக்கவேண்டியது அவசியம். 1கொரி. 7:2, மல். 2:15.

எந்த ஒரு குறிப்பிட்ட நபரையும் மனதில் வைத்துக்கொண்டு உங்கள் வருங்கால கணவரின் குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்தால் அந்த மனிதனை நோக்கியே எல்லாவற்றையும் சாய்த்துவிடுவீர்கள். ஆகவே, அப்படிப்பட்ட சிந்தனையை விட்டு *உங்களுக்கு மிகவும் முக்கியமானது என்ன* என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.

உங்களது இருவரது புரிதல் ஒன்றாயிருத்தல் அவசியம். இருவருக்கும் ஒரே மாதிரியான யோசனைகள் இருப்பது சமாதானத்தைத் தரும்.

கருத்தில் கொள்ள வேண்டியவைகளில் *மிக முக்கியமான விஷயங்களைக் கீழே பட்டியலிடுகிறேன்* :

1-உங்களது விசுவாசம் மற்றும் நம்பிக்கை ஒன்றாக உள்ளதா?  வேதவசனங்களைப் படிப்பதில் அவர் மகிழ்ச்சியடைகிறாரா?

2-நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள் என்ற பதிலுக்கு இருவரது கருத்துக்களும் ஏற்புடையதா?

3-மற்ற எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணையிடம் உங்களை ஈர்த்தது என்ன?

4-இனியும் காலம் தாழ்த்தாமல் இப்போது திருமணம் செய்துகொள்ள விரும்புவது ஏன்?

5-உங்கள் இருவரது வாழ்க்கைத் தரம் மற்றும் அமைப்பு எப்படிப்பட்டது? பிற்கால சமாதானமான வாழ்விற்கு இந்த வித்தியாசங்களை கண்டறிவது மிக அவசியம். *எ.கா.* : நேர்த்தியான ஒழுக்கம், நேரம் கடைபிடித்தல், சுத்தம், சப்தம் விரும்பிகள், தனிமை விரும்பியா அல்லது நண்பர் சகாக்களுடன் இருப்பதை விரும்புபவரா?, அனுதின பழக்கவழக்கங்கள், புகை மற்றும் மது போன்ற பயன்பாட்டாளரா?

6-பிள்ளைப்பேற்றின் திட்டங்கள்? குடும்பத்தில் பெற்றோரின் பங்கு, பெற்றோரை ஆதரித்தல், இருதரப்பினரது குடும்ப உறுப்பினர்களில் உள்ளோரது வாழ்க்கையில் உங்கள் இருவரது பொறுப்புகள் என்ன?

7-வெளிப்படையான தன்மையோடு இருப்பவரா? நெருக்கப்படும் போதுள்ள குணாதிசயங்கள் எப்படிப்பட்டவை? சரீர சுகத்திற்காக நிலையான மருத்துவம் வாழ்நாள் முழுதும் எடுப்பவரா? 

8-கொடுத்த வாக்கை மீறுபவரா? அல்லது தனது வாக்குறுதியை சமயத்திற்கேற்றார் போல் மாற்றுபவரா? திருமணம் என்பது வாக்குறுதியில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். மல். 2:14, எசே. 16:8

9-இருவரும் வேலைக்குச் செல்லவேண்டியுள்ளதா? அவ்வாறு சென்றால் இருவரது சம்பாத்தியத்தின் நிலைபாட்டில் இருவருக்குமான சுதந்திரம் தனித்துவமானதா? வேதம் அதற்கு இடமளிக்கவில்லை !!

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக, அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். *அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்* என்பதை 2கொரி. 6:14-18ல் வாசிக்கிறோம்.

இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, *பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்*. 2கொரி. 7:1

விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் நீங்கள் இருவரும் வேறுபடுகிறவராயிருந்தால், திருமணத்திற்குப் பின் ஆளுக்கொரு சபைக்கு போகும் பிரிவினை முடிவில்லாததாகும்.

திருமணம் என்பது காரியங்களை ஒன்றாகச் செய்வதற்கான ஒரு நேரமாகும். அதில் கடவுளை வணங்குவதும் அடங்கும்.

உங்கள் திருமணத்தின் ஆரம்ப கட்டத்தில் நீங்கள் ஒரு சமரசத்திற்கு வந்தாலும் பிற்காலங்களில் அவை சமாதானக் குலைச்சலை உருவாக்கும்.

எதிர்கால மனவேதனைகளை கருத்தில் கொண்டு உங்களைப் போலவே நம்பும் விசுவாசமுள்ள கிறிஸ்தவரை திருமணம் செய்து கொள்ளுங்கள். பிதாவும் குமாரனும் ஒன்றாயிருப்பதைப் போல தம் சீடர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று இயேசு ஜெபித்தார் (யோ. 17:20-23).

கணவன்-மனைவியாக உங்கள் வாழ்க்கையில் ஒற்றுமை நிறைந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும், எல்லை மீறிச் சென்று முழுமையான சரியான துணையைத் தேடத் துவங்கினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதையும் மறந்துப்போகவேண்டாம். *நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவருக்கும் சில "குறைகள்" இருக்கும்*; உங்கள் (மற்றும் அவரது) எதிர்கால மகிழ்ச்சிக்கு எந்த விஷயங்கள் எவ்வளவு முக்கியம் என்பதே கேள்வி.

உங்கள் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் நீண்ட காலம் உங்களால் வாழமுடிந்தது. அவர்களை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனாலும் அவர்களுடன் பல ஆண்டுகளாக வாழ முடிந்தது ஏன்? அன்பு அதைச் செய்கிறது.

ஒரு ஆண் தன் மனைவியை ஆபிரகாமின் நாட்களில் தேர்ந்தெடுக்க முடியாது. அதை பெற்றோரே ஏற்பாடு செய்தனர். ஈசாக்கின் மனைவி தொலைதூர உறவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் அவரது மனைவி *வாழ்நாள் முழுவதும் தனது கணவருடன் வாழ்ந்தார்*. ஆதி. 24

திருமணம் முடிந்தபின்னர் சிறந்த குணாதிசயங்களைத் தேடக்கூடாது. மாறாக எப்படி சிறப்பாக வாழவேண்டும் என்பதையே திட்டமிடவேண்டும். நீங்கள் நினைத்திருந்ததை விட இது கடினமாகவேயிருக்கும்.

திருமணம் என்பது (1) சேர்ந்து வாழ்வதிலும், (2) சந்ததியை உருவாக்குவதிலும், (3) பிள்ளைகளை தேவனுக்கென்று வளர்ப்பதிலும் இருக்கவேண்டும். இதில் எந்த வகையிலும் மாற்றுக்கருத்து இருத்தல் கூடாது. ஆதி. 1:28, 2:18-24, பிர. 9:9, எபி. 13:4, 1கொரி. 6:15-20, நீதி. 5:15-19.

*வயதில் இளையவரைக் கணவராகத் தேர்ந்தெடுக்கலாமா?*
ஆதாம் உருவாக்கப்பட்ட பின் ஏவாள் உருவாக்கப்படுகிறாள். ஆதி. 2:7, 15, 18.

ஆகவே இருவரும் ஒரே வயதிலுள்ளவர் என்பதை நாம் யூகிக்கமுடியும்.

சாராளுக்கு 10 வயது மூத்தவராக கணவனாகிய ஆபிரகாம் இருந்தார். ஆதி. 17:17

ஒரு பெண்ணின் பாலியல் ஆசைகள் 20 முதல் 35 வயது வரையிலும், ஆண் 35 மற்றும் அதற்குப் பிறகும் இருக்கும் என்று மருத்துவம் சொல்கிறது. சராசரி வயதுடன் இருக்கவேண்டியதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று.

சரீர அளவில் பெண்கள், ஆண்களை விட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் முன்னரே முதிர்ச்சியடைகிறார்கள். அதுபோலவே அவர்களது மாதவிடாயின் நிறுத்தத்தையும் அதனுள் அடைகிறார்கள்.

ஆகவே, பெண்ணைவிட ஆணின் வயது மூத்தவராயிருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பாரம்பரிய ஏற்றுக்கொள்ளல் மற்றும் மருத்துவ காரணங்களையும் கொண்டுள்ளது.

இருந்தபோதிலும், வயது என்பது ஒரு எண்ணிக்கை என்றும் மன முதிர்ச்சி, அன்பு, புரிதல் மற்றும் பொருந்தக்கூடிய தன்மை இருக்கும்போது வயது இடைவெளி ஒரு பொருட்டல்ல என்று சொல்பவரும் உண்டு.

வெவ்வேறு தம்பதிகளுக்கு வெவ்வேறு வயது இடைவெளிகள் வித்தியாசமாக வேலை செய்கின்றன. ஒரு விதியாக இந்தக் கோட்பாடு எவருக்கும் பொதுவாக இருக்க முடியாது.

*இருவருக்குமிடையே அதிக வயது இடைவெளியானது திருமணம் முடிந்த சிறிது காலங்களில் தனது உண்மை நிலைமை அவர்களைக் கடுமையாகத் தாக்கும்*. ஆரம்ப கால ஆசைத்தீப்பொறிகள் மங்கி திருமண வாழ்க்கை வேகமாக கசந்துவிடும்.

குடும்பம் என்பது கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து எடுத்துச்செல்வது. அதற்கு இருவரது புரிதலும், மனப்பக்குவமும், முதிர்ச்சியும் ஒரு சேர ஒரே அளவில் இருந்தாலன்றி அவர்கள் ஏற்றெடுக்கும் நுகம் கடினமாக இருக்கும். 1கொரி. 7:3

வயதில் அதிக வித்தியாசமுள்ள மூத்த / இளைய பெண்ணை ஒரு ஆண் அல்லது பெண் அவரை மணமுடிக்கும் போது ஆரம்ப கால வாழ்க்கையில் தங்களுக்குள்ளே எவ்விதமான சமாதானத்தை சொல்லிக் கொண்டாலும், பிற்கால நடைமுறை வாழ்க்கையில் அது நிச்சயம் *அதே அளவிற்கு பிரிவையும் தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை*.

1இரா. 1:1-4-ல் காணும் அபிஷா – தாவீது நமக்கு மிகப்பெரிய உதாரணம்.

ஆகவே, இருவரும் அதிக வயது வித்தியாசம் இல்லாமல் இருப்பது நடைமுறைக்கு ஏற்றது. வேதாகமத்தைப் பொறுத்தமட்டில் திருமண வயது வித்தியாசத்தைக் குறித்த எந்த வரையறையும் காணவில்லை.

*எனது முடிவுரை*:
அனைத்தையும் தேவனே தீர்மானிக்கிறவராகையால், உங்களது தேர்வு சரியானதாக வேதத்தின்படியிருக்கும்படி ஜெபியுங்கள். வசனமே தேவனுடைய சித்தத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது. நீதி. 6:23, சங். 119:130, 104-105, கொலோ. 1:9-11, 1தெச. 4:3

நம் அனைவருக்குமான தேவ சித்தம் ஒன்று உண்டு 2பேதுரு 3: 9. அது நாம் பாவத்திலிருந்து விடுபடுவதே அவருடைய சித்தம். 1தெச. 4: 3; 1பேதுரு 4: 1-2

ஆகவே, அனைத்திலும் பிரதானமாக சம்பாத்தியம், வேலை, செல்வாக்கு, அந்தஸ்து, அழகு, சௌந்தர்யம் போன்ற எவைகளையும் பிரதானமாக எண்ணாமல் உங்களது துணைவர் சத்தியத்தில் நிலைநிற்கிறாரா என்பதை அறியவும். மீதம் அனைத்தையும் தேவன் ஆசீர்வதிப்பார். மத். 6:33

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக