செவ்வாய், 14 செப்டம்பர், 2021

#1112 - ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ”ஸ்தோத்திரம்” என்று சொல்லிக்கொள்வது வழக்கம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் பார்க்கும் போது ஸ்தோத்திரம் சொல்லக்கூடாது என்றும் அது தவறு என்றும் கிறிஸ்துவின் சபையில் உள்ள ஒருவர் வாதிட்டார். இது சரியா என்று விளக்கவும்*

#1112 - *ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ”ஸ்தோத்திரம்” என்று சொல்லிக்கொள்வது வழக்கம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் பார்க்கும் போது ஸ்தோத்திரம் சொல்லக்கூடாது என்றும் அது தவறு என்றும் கிறிஸ்துவின் சபையில் உள்ள ஒருவர் வாதிட்டார். இது சரியா என்று விளக்கவும்*

*பதில்* : பல நாட்களாக இதைக் குறித்து எழுதவேண்டுமென்று இருந்தேன். சரியான நேரத்தில் கேட்ட இந்த கேள்விக்காய் உங்களுக்கு எனது நன்றிகள்.

*ஸ்தோத்திரம்* என்ற இந்த வார்த்தை தமிழ் வேதாகமத்தில் சுமார் 106 தடவை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் முறையாக இந்த வார்த்தை ஆதி. 9:26ல் காணமுடியும். ”ஆதி. 9:26 சேமுடைய தேவனாகிய *கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக*; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்”.

இந்த வார்த்தை மூல பாஷையான எபிரேயத்தில் *பாவ்-ரேக்* என்றுள்ளது. அதற்கு:
மண்டியிட; கடவுளை ஆசீர்வதிப்பதற்காக (வணக்கத்தின் செயலாக), மற்றும் (நேர்மாறாக) மனிதன் (ஒரு நன்மையாக); ஏராளமாக, ஒட்டுமொத்தமாக, ஆசீர்வதிக்கவும், வாழ்த்தவும், பெரிதும், உண்மையில், முழங்கால், பாராட்டு, வணக்கம், நன்றி, தூஷனம், சபித்தல் என்ற அர்த்தங்கள் உள்ளது.

கிரேக்கத்தில் *யூலோஜியா* என்றும் *யூக்காரிஸ்டியா* என்றும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

யூலோஜியா என்பதற்கு : நன்றாக பேசுவது, அதாவது மொழியின் நேர்த்தி; பாராட்டு ("புகழ்ச்சி"), அதாவது, (மரியாதையுடன்) வணக்கம்; மதரீதியாக, ஆசீர்வாதம்; உட்பொருள் பிரதிஷ்டை மூலம்; நீட்டிப்பு நன்மை அல்லது பெரிய அளவு: - ஆசீர்வாதம் (ஒரு விஷயம்) வரம் என்பது தமிழ் அர்த்தம்.

யூக்காரிஸ்டியா என்பதற்கு : நன்றி; உண்மையில் நன்றியுடைய மொழி (கடவுளுக்கு, வழிபாட்டுச் செயலாக): நன்றியுணர்வு, நன்றி என்பது தமிழ் அர்த்தம்.

நாம் படிக்கும் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. மூல பாஷையான எபிரேயம் மற்றும் கிரேக்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

மொழிபெயர்த்தவர்கள் சமஸ்கிருத மொழியின் பின்புலத்திலிருந்து வந்தவர்களாதலால் அதிகமான சமஸ்கிருத சொல் தமிழ் வேதாகமத்தில் காணமுடியும்.

எ.கா. ஞானஸ்நானம், பிரமாணம், அக்கினி, இரட்சிப்பு, உபதேசம், கன்னி, சிநேகிதன், ஸ்நேகம், அபிஷேகம் என்று ஏராளமான சமஸ்கிருத சொற்கள் தமிழ் வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் போது *கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக* என்பதை  Blessed *be* the Lord என்றும்  Praise *to* the Lord  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வேத வாக்கியத்தை சொல்லி *உம்மை காணச்செய்த தேவனுக்கு நன்றி* என்று தேவனைத் துதிப்பார்கள்.

தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் அதைப் போன்று *கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக* என்று கூறினர். அதாவது *உம்மை காணச்செய்த தேவனுக்கு நன்றி* என்று ஒருவரையொருவர் காணும் போது தேவனுக்கு துதியை (நன்றியை) ஏறெடுப்பார்கள்.

Blessed be the Lord என்றும் Praise to the Lord என்பது மறுவி இப்போது *ப்ரைஸ் த லார்டு* ஆகிப் போனது. ஊழியக்காரன் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சிலருக்கு அர்த்தமே தெரியாவிட்டாலும் ஆங்கில மோகத்தில் *ப்ரைஸ் லா* என்று உச்சரித்துக்கொண்டிருப்பதை நானே கேட்டிருக்கிறேன்.

வெளிநாடு செல்வதற்காக வேலை தேட யோசனை மாத்திரமே துவங்கியிருப்பவர் கூட, சாதாரணமாக விண்ணப்பம் செய்து ஏழு நாளில் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) வந்துவிடும் என்றாலும், பொறுமையில்லாமல் தட்கல் முறையில் கூடுதல் பணம்கட்டி 3 நாளில் பெறவேண்டும் என்ற அவசர புத்தியுள்ள இக்கால உலகம்.

தன் கணவனை / மனைவியை / தகப்பனை / பிள்ளையை / உற்றாரை மரணத்தில் இழந்து தவிக்கும் ஒருவருக்கு ஆறுதலாக நேரடியாக போகமுடியவில்லை என்று தொலைபேசியிலாவது ஒரு பத்து நிமிடம் பேசி ஆறுதல் படுத்தக்கூட நேரமில்லாமல் REST IN PEACE என்று 3 வார்த்தைகளில் தன்னைச் சுருக்கிக்கொண்டது இக்கால உலகம். அதையும் கூட முழுமையாக பதிவிட நேரமில்லாமல் *RIP* என்று சொல்வது இன்னும் வேதனைக்குறியது.

பிரதர் என்றோ சகோதரன் என்றோ ஆனந்தமாய் கூப்பிட்டக் காலம் போய் இப்போது *ப்ரோ* என்றும் *சகோ* என்றும் *பேச்சு வழக்கில்* உபயோகப்படுத்துவது உதாசீனம் என்பதே என் கருத்து.

*கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக* என்ற அழகிய சொல் காலப்போக்கில் வளர்ந்து நேரமிண்மையின் காரணமோ என்னவோ *ஸ்தோத்திரம்* என்ற சுருக்கத்துடன் தவித்துக்கொண்டுள்ளது. Rest In Peace எவ்வாறு RIPயானதோ ஸ்தோத்திரம் என்ற வார்த்தைக்கு பதிலாக நன்றி என்று பயன்படுத்தினால் குறைந்தபட்சம் அதன் உண்மை அர்த்தமாவது மிஞ்சும் !

ஒருவர் மற்றவரை பார்த்து *ஸ்தோத்திரம் என்று சொல்வதன் அர்த்தம் நன்றி* என்பது.

*கர்த்தருக்கு நன்றி சொல்கிறார்களா அல்லது அந்த நபருக்கு நன்றி சொல்கிறார்களா என்பது அவரவர்களது புரிதல்*.

நேரடியாக என்னை வந்து பார்த்ததற்காக நன்றி என்றோ
என்னைக் கூப்பிட்டதற்காக நன்றி என்றோ
போயிட்டு வரேன் நன்றி என்றோ அல்லது இதற்காக தேவனுக்கு மகிமையுண்டாவதாக அவருக்கே நன்றி (ஸ்தோத்திரம்) என்றோ பயன்படுத்துவது அவரவர் எண்ணங்களைப் பொறுத்தது.

*ஆனால், ஸ்தோத்திரம் சொல்வதே தவறு என்பது தவறான கூற்று*.

ஸ்தோத்திரம் என்றால் நன்றி ! ஒருவருக்கு நன்றி சொல்லக்கூடாது என்று சொல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

தனி ஒரு மனிதனுக்கு நன்றி சொல்கிறார்களா அல்லது காணச்செய்த தேவனுக்கு நன்றி சொல்கிறார்களா என்பது அவரவர் தீர்மானிக்கவேண்டியது.

Mary Christ Mass என்பது மாறி காலப்போக்கில் Merry Christmasஆகி பின்னர் Christmas ஆகி இப்போது ஒன்றுமில்லாத X-masஆகிப்போனது போல அர்த்தம் புரியாதவர்களால் இந்த ஸ்தோத்திரம் என்ற வார்த்தையும் அலங்கோலமாக்கப் பட்டுக்கொண்டுள்ளது !

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக