#1107 - *கிறிஸ்தவர்கள் ஆயுள் காப்பீடு எடுக்கலாமா*?
*பதில்* : ஆயுள் காப்பீடு (Life Insurance) என்ற கேள்வி வரும் போது பல கிறிஸ்தவர்களுக்கு இச்செயல் ஒரு விசுவாசமின்மையைக் காட்டுகிறதல்லவா என்று யோசனையுள்ளது.
அன்றன்றுள்ள ஆகாரத்தை எங்களுக்குத்தாரும் என்று ஜெபிக்கச் சொன்ன (மத். 6:11) அதே ஆண்டவர் நம்மை உழைக்கவும் சொல்கிறார். 2தெச. 3:10
வேலை செய்வது என்பது நம்மைக் கவனித்துக்கொள்வதில் கடவுளை நம்பவில்லை என்று அர்த்தமல்ல. மனிதர்கள் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். மனிதனால் முடியாததை அவர் செய்வார்.
ஆயுள் காப்பீட்டை எடுத்த எவருக்கும் விபத்தோ, காயமோ, ஆபத்தோ, நீரில் மூழ்கிப்போவதோ அல்லது எவ்வித இறப்பையும் தடுப்பதில்லை.
காப்பீடு என்பது ஒரு ஆபத்தான சம்பவம் ஏற்பட்டால் அவருக்கு அல்லது அவரைச் சார்ந்த நபருக்கு தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீண்டு வர அந்த இழப்பீட்டை ஈடு செய்கிறது.
இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவை அண்டி வந்த எவருக்கும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஆபத்துகளோ அழிவோ விபத்தோ வராது என்று தேவன் வாக்குறுதி அளிக்கவில்லை.
மாறாக, கிறிஸ்தவர்களுக்கு ஆபத்து உண்டு என்றும் கவனமாக இருக்கவேண்டும் என்றே சொல்கிறது. (அப். 14:22, 1தெச. 3:4, 2தீமோ.3:12, வெளி. 2:10)
பேரழிவு ஏற்படுவதற்கு முன்பு, ஆரம்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் கொள்கையை வேதம் நமக்குக் கற்பிக்கிறது. ”விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்”. நீதி. 27:12
பேரழிவிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ள ஒரு பேழையை உண்டுபண்ணும்படி நோவாவிடம் சொன்னார் நம் ஆண்டவர். எபி. 11:7
தீய நாளிலிருந்து பாதுகாக்கும்படி வேதம் அடிக்கடி எச்சரிக்கிறது.
காப்பீடு என்பது எதிர்காலத்தை சேமிப்பதற்கான அல்லது அமைப்பதற்கான ஒரு வழியாகும். இது ஒரு முக்கியமான வேதாகமக் கொள்கை.
நீதி. 6:6-8 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
வீட்டுத்தலைவன் தன் வீட்டாருக்கு வேண்டிய பாதுகாப்பை செய்யக் கடமைப்பட்டுள்ளான். ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். 1தீமோ. 5:8
பிள்ளைகளுக்கு தேவையானவற்றை சேர்த்துவைக்கவேண்டியது பெற்றோரின் கடமை. “பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்”. 2கொரி. 12:14
நமது சொத்தில் ஏற்படுத்தும் அல்லது நிகழும் விபத்துகளிலிருந்து பல்வேறு வகையான காப்பீடு நம்மையே சார்ந்துள்ளவர்களைப் பாதுகாக்கிறது.
நம்முடைய அலட்சியம் அல்லது கவனக்குறைவு காரணமாக பாதிப்புக்குள்ளான அல்லது இழப்புக்கு ஆளானவர்களுக்கு இழப்பீடு வழங்குவது நமது பொறுப்பு என்பதை நியாயபிரமாணச் சட்டத்தில் இஸ்ரவேலருக்கு தேவன் கொடுத்த சட்டத்தைக் கவனிக்கவும். யாத். 21-22 அதிகாரங்கள்.
காப்பீட்டைக் கொண்டிருப்பது சாத்தியமான நிதி சரிவைத் தவிர்க்க நமக்கு உதவுகிறது.
ஆகவே, காப்பீட்டை எடுத்துச் செல்வது நம்பிக்கையின்மை அல்லது வேதப்பூர்வமற்றது அல்ல. மாறாக, உண்மையான கிறிஸ்தவ முறையில் தேவனையும், நம் வீட்டாரையும், நம்மையும் சரியாக பாதுகாக்க காப்பீடு உதவும்.
காப்பீடு வைத்திருப்பது தேவனை நம்பவில்லை என்று அர்த்தமல்ல. வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளை நீங்கள் உங்களுக்குக் கிடைத்ததைக் கொண்டு சமாளிக்க உங்களால் முடிந்ததைச் செய்கிறீர்கள் என்பதே இதன் பொருள்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக