புதன், 9 ஜூன், 2021

#1105 - எகிப்திலிருந்து கானான் எவ்வளவு தூரம்? தேவன் ஏன் இஸ்ரவேல் ஜனங்களை 40 வருடங்கள் வனாந்திரத்தில் அலையவிட்டார்?

#1105 - *எகிப்திலிருந்து கானான் எவ்வளவு தூரம்? தேவன் ஏன் இஸ்ரவேல் ஜனங்களை 40 வருடங்கள் வனாந்திரத்தில் அலையவிட்டார்*?

*பதில்* :  எகிப்திலிருந்து கானானுக்கு சுமார் 900 கி.மீ தூரம்.

வெளிவந்த அனைத்து இஸ்ரவேல் ஜனமும் (ஆண்கள்  601,730 (எண். 26:51) / 603,550 (எண். 1:46, 2:32), பெண்கள், பிள்ளைகள் & புறஜாதியினர் (யாத். 12:38) உட்பட  தோராயமாக 25 இலட்சம் ஜனம்) தங்கள் பரிவாரத்துடன் கடந்து சென்றதால் சீனாய் மலை வரை செல்வதற்கே மூன்று மாதங்கள் பிடித்தது (யாத். 19:1-2)

உபா.1:1-2ன்படி இந்த தூரத்தை பதினோரு (11) நாட்களுக்குள் பிரயாணிக்க முடியும். ஆனாலும், பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். யாத். 13:17-18.

இருந்தபோதும், முரட்டாட்டம் பிடித்த இந்த ஜனம், தேவ வார்த்தைக்கும், அவருடைய மகத்துவத்திற்கும், வல்லமைக்கும், செவிசாய்க்காமல் தங்கள் சுய இச்சையை நிறைவேற்றினதால் சுமார் இருபத்திநான்கு (24) மாதங்களில் காதேஸ்-பர்னியா போய் சேர்ந்த போதும் வாக்குத்தத்த பட்டணத்தை சுதந்தரிக்க முடியாமற் போனது இக்கால கிறிஸ்தவ மேடை வியாபாரிகளுக்கு பெரிய பாடம்.

ஆராதனை என்ற காரணத்தை முன்னிட்டு தங்கள் வியாபாரத்தையும், தங்கள் வித்தைகளையும், தங்கள் ஜனங்களை திருப்திபடுத்தும்படியான அநேக கற்பனைகளையும் உட்புகுத்தி, தேவனுக்கென்று செயல்படுத்தும் அத்தனையும் அவர்களுக்கே வந்தமையும் என்பதை அறிய வேண்டும். குழுவில் இருந்து வெளியேறுவதை தான் காணமுடியுமேயன்றி வேதத்திற்கு செவிசாய்த்து தங்களை மாற்றியமைப்பதை காண்பது வெகு அறிதே.

கேள்விக்கான பதிலை சுருக்கமாக நான் மேலே சொல்லியிருந்தாலும், புறப்பட்ட இடத்திலிருந்து ஒவ்வொரு ஸ்தலமாக கீழே பட்டியலிடுகிறேன்.

புறப்பட்ட முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் ராமசேஸ் நகரில் தொடங்கியது (யாத். 12: 2, 6).

பின்னர் அவர்கள் சுக்கோத்துக்குச் சென்றார்கள் (யாத். 12:37) அன்றிரவு அவர்கள் எகிப்திலிருந்து வெளியேறிய நாள் (யாத். 12: 40-42; உபா. 16: 6).

சுக்கோத்திலிருந்து, செங்கடலின் வனப்பகுதி வழியாக, ஏத்தாம் வரை பயணத்தின் அடுத்த கட்டமாக இருந்தது (யாத்.13: 18-20).

அவர்கள் ஈரோத் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர் (யாத். 14: 2). செங்கடலைக் கடந்த பிறகு, அவர்கள் மாராவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டனர் (யாத். 15: 22-23).

அடுத்த நிறுத்தம் ஏலிம் (யாத். 15:27). பின்னர் அவர்கள் சீன் வனாந்திரப்பகுதியை அடைந்தனர். இதுவரை மொத்தம் 30 நாட்கள் (யாத். 15).

அடுத்த நிறுத்தம் ரெவிதீம், பின்னர் சீனாய். இதற்கு இன்னும் 30 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் பிடித்தது (யாத். 19: 1-2). அவர்கள் இங்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்தார்கள் (எண். 10:11).

சீனாயிலிருந்து தபேராவுக்கு மூன்று நாட்கள் பயணம் இருந்தது (எண். 10:33). அடுத்த நிறுத்தம் அஸ்ரோத் (எண். 11:35). அங்கிருந்து அவர்கள் பாரான் வனாந்திரப்பகுதியில் உள்ள காதேஷ்-பர்னியாவுக்குச் சென்றனர்.

*சீனாய் மற்றும் காதேஷ் பர்னியா இடையேயான நிகழ்வுகளின் அட்டவணை*: சுமார் 11 மாதங்கள்

"இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று" எண். 10:11

11 மாதங்கள், 5 நாட்கள் சினாயில் கழித்தபின் இஸ்ரவேல் ஜனம் சீனாயிலிருந்து வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்திற்காக புறப்படுகிறது.

முதல் மாதத்தின் 14 வது நாளில் அவர்கள் புறப்பட்டதால், எகிப்திலிருந்து வெளியேறியதிலிருந்து அவர்கள் ஒரு வருடம், ஒரு மாதம் மற்றும் ஒரு வாரம் பயணம் செய்ததாக அர்த்தம்.

சீனாய் மற்றும் காதேஷ் பார்னியா இடையே 10.5 முதல் 11 மாதங்களுக்குள் சுமார் 20 நிறுத்தங்களில் அவர்கள் பயணம் செய்தனர்

இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள்." எண். 20:1

அவர்கள் மூன்றாம் ஆண்டு முதல் அல்லது எகிப்திலிருந்து வெளியேறி சரியாக 24 மாதங்களில் காதேஷ் பார்னியாவுக்கு வந்தார்கள்.

காதேஷ் பர்னியாவில் இஸ்ரவேலர் 38 ஆண்டுகள் முகாமிட்டார்கள்.

வனாந்திரத்தில் அலைந்து திரிந்த 40 வது ஆண்டின் 5 வது மாதத்தின் முதல் நாளில் ஆரோன் இறந்தார். ஆரோனுக்கு 30 நாட்கள் துக்கங்கொண்டாடியதும், மக்கள் காதேஷ் பர்னியாவுக்கு அருகில் இருந்த ஓர் மலையை விட்டு வெளியேறி தெற்கே செங்கடலுக்குச் சென்றனர் (உபா. 1:40) இரண்டாவது முறையாக எசியோன்கேபேர் ( உபா. 2: 8) மலைகளில் வசிக்கும் ஏதோமியர்களைத் தவிர்ப்பதற்காக அவர்கள் கிழக்கு நோக்கிப் பயணித்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கினர்.

அவர்கள் சாரேத் பள்ளத்தாக்கை கடப்பதற்கு முன்பு, இஸ்ரவேலர் மீண்டும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுத்ததால் கொள்ளிவாய் சர்ப்பங்கள் அனுப்பப்பட்டது. தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்கள், குணப்படும்படி மோசே ஒரு வெண்கலத்தில் கொள்ளிவாய் சர்ப்பத்தை உண்டுபண்ணி ஏற்றிவைக்கிறார். எண். 21.  [_உயிரை காப்பாற்றிய தெய்வம் என்று நினைத்து இந்த வெண்கல சர்ப்பத்தையே விக்கிரகமாக்கி வணங்க ஆரம்பித்த ஜனங்களை முன்னிட்டு, பிற்காலங்களில் இந்த வெள்ளி கொள்ளிவாய் சர்ப்பமானது தூளாக்கப்பட்டது. 2இரா.18:4_]

41 ஆவது பஸ்காவுக்கு நான்கு நாட்களுக்கு முன்னர், 41 வது ஆண்டின் 1 வது மாதத்தின் 10 வது நாளில் யோர்தானைக் கடந்தது இஸ்ரவேல் ஜனம். இவர்கள் கோசேனை விட்டு வெளியேறும்போது சரியாக 40 ஆண்டுகள்.

அவர்கள் யோர்தானைக் கடந்த பிறகு ஓய்வு ஆண்டுகளையும் ஜூபிலிகளையும் எண்ணத் தொடங்கினர். (எண். 33:38; 20:28; உபா. 34: 8; யோசு. 4:19; 5:10).

கில்காலில் முகாமிட்ட இஸ்ரவேலர் பின்னர் எரிகோவையும் ஆயியையும் தோற்கடித்தது. அவர்கள் சீகேமுக்குச் சென்று யோசுவாவின் பலிபீடத்தைக் கட்டினார்கள். (யோசு.8)

*தேவன் ஏன் 40 வருட காலம் வனாந்திரத்தில் அலையவிட்டார்*?
காதேஸ்-பர்னியாவிலிருந்து முன்னோக்கி செல்லும்படியான வேளை வந்தபோது, இஸ்ரவேலர்களில் சிலர், நாம் உள்ளே போவதற்கு முன்பதாக, அந்த தேசம் எப்படிப்பட்டது என்று பார்த்து வந்தால் நலம் என்று தங்கள் சுகநலன்களையும் பெலத்தையும் கணக்குப் போட்டனர். எகிப்திலிருந்து இவர்களின் பெலத்தால் வெளியே வந்ததுபோல இவர்களுக்கு எண்ணம் !! (உபா. 1:22)

அதன் அடிப்படையில் மோசேயும் தேவனுடைய சம்மதியுடன் கோத்திரத்திற்கு ஒருவராக 12 பேரைத் தேர்ந்தெடுத்து வேவு பார்க்க அனுப்பினார். எண். 13:1-24

வேவு பார்க்க போனவர்களில் யோசுவாவும் காலேபையும் தவிர்த்து, பாக்கி 10பேரும், ஐயோ, அந்த தேசத்தில் உள்ளவர்கள் முன்பு நாங்கள் வெட்டுக்கிளியைப் போல இருந்தோம், நம்மை அவர்கள் கொன்றுபோடுவார்கள் என்று அறிவித்தனர். எண். 13:25-33

அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; *இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம்.*

நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? *எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்* என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.. எண். 14:1-4

ஆனால், தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். எண். 14:6-9

அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது. கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? எண். 14:10-11

தேவன் கடுங்கோபங்கொண்டு, அத்தனை ஜனங்களையும் அழிப்பேன் என்ற பொழுது, அவர்களுக்காக மோசே, தேவனிடத்தில் மண்றாடினதன் விளைவாக, தேவன் மோசேயின் நிமித்தம் மனமிறங்கி, அந்த ஜனங்களை சடுதியில் அழிக்காமல் தப்பவிட்டார்(எண். 14:20).

ஆனால், அந்த ஜனங்களின் மனவிருப்பத்தின்படி வனாந்திரத்திலேயே அனைவரும் சாகும்படிக்கு அலையவிட்டார். வசனங்களை வாசிக்கவும்.

பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன். நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.

கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள்.

*நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள்*.


கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார். அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள்.  எண். 14:27-38

*நமக்கான பாடம் என்ன*?
தேவனுடைய மகத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தங்கள் பெலத்தையும் தாலந்துகளையும் நம்பி, 40 நாட்கள் சுற்றித்திரிந்தும் மற்ற ஜனங்களை தவறான பாதையில் திசைதிருப்பிவிட்டவர்களின் கதி ஒரு நாளுக்கு ஒரு வருடம் என்ற கணக்கில், 40 வருடங்கள் வனாந்திரத்திலேயே இருந்து மரித்தார்கள்.

சத்தியத்தை அறிந்த கிறிஸ்தவர்கள், தேவனுடைய வார்த்தையில் மாத்திரம் நிலைநிற்காமல், சொந்த தாலந்துகளிலும், பெலத்திலும், மனரம்மியத்திலும் ஜனங்களை குஷிப்படுத்த முற்படுவது பேராபத்து என்பதை அறியவேண்டும்.

அக்கினி ஞானஸ்நானம் என்பது அழிவைக் குறிக்கிறது என்பதை அறியாமல், அக்கினி அபிஷேகம் வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்பவர்கள் கவனத்தோடு செயல்பட்டு மனந்திரும்பவேண்டிய எச்சரிப்பு உள்ளது !! மத். 3:11-12

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக