வெள்ளி, 31 ஜனவரி, 2020

#738 - ஒரு கிறிஸ்தவனாக எக்ளீஷியா (சபை) என்ற வார்த்தைக்கு ஏற்றார்போல் எப்படி பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது?

#738 - *சூழ்நிலை காரணமாக கொஞ்சம் தாமதமாக அலுவலகம் போனாலும் அதை மறைக்க சில காரணங்கள் சொல்ல வேண்டியுள்ளதே?* ஒரு கிறிஸ்தவனாக எக்ளீஷியா (சபை) என்ற வார்த்தைக்கு ஏற்றார்போல் எப்படி பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது?

*பதில்*
இது வேதாகமத்தில் பல அம்சங்களில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு பெரிய தலைப்பு. முழுமையாக அனைத்தையும் கவர்ந்து விட முடியாது. எனினும் சில பொதுவானவைகளை மையமாக வைத்து எழுதுகிறேன்.

*முதலாவதாக*, யாக்கோபு 1:13-16 லிருந்து ஆரம்பிக்கலாம்.

"சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.  அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்."

பாவத்தில் மரிப்பது என்பது நம் ஆசைகளிலிருந்தே உருவாகிறது என்று யாக்கோபு சொல்கிறார்.

ஒவ்வொரு நபருக்கும் ஆசைகள் உண்டு. அவை வாழ்க்கைக்கு அவசியமானவை. சாப்பிட வேண்டும், குடிக்க வேண்டும், தூங்க வேண்டும், குடும்ப உறவு கொள்ள வேண்டும், மற்றவர்களால் விரும்பப்பட வேண்டும், இன்னும் இப்படி பல ஆசைகள் உண்டு ஒவ்வொரு மனிதருக்கும்.

ஒவ்வொரு ஆசையும் வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாகும். இவைகளை சரியான பாணியிலோ தவறான பாணியிலோ கையாளமுடியும்.

தேவனுடைய சட்டத்தை மீறும் அளவில் சாத்தான் அந்த ஆசைகளை  பூர்த்தி செய்ய நேரிடும் சூழ்நிலைகளில் நம்மை வைக்கிறான்.

தேவனுடைய  சட்டத்தை மீறி தண்டனைக்கு எவ்வாறு தப்பித்துக் கொள்ளலாம் என்று சிந்திக்கும் போது இச்சையில் விழ வாய்ப்பு உள்ளது.

*இரண்டாவதாக*, எல்லா பாவங்களையும் தங்கள் வாழ்க்கையிலிருந்து அகற்றும் முயற்சியாக பலர் கிறிஸ்தவத்தை அணுக முயற்சிக்கின்றனர்.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் பாவம் செய்கிறார்கள் (ரோமர் 3:23; 1யோவான் 1: 8-10).

கிறிஸ்தவம் என்பது நீதியைப் பற்றியது. நீதியை நோக்கமாகக் கொண்டு நாம் பாவத்திலிருந்து விலகிச் செல்கிறோம். எபிரெயர் 12:1-3.

நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்.  துர்யிச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  ரோமர் 13: 11-14.

சாலமோன் ஞானி நீதியையும் பாவத்தையும் அணுகுவதில் உள்ள அவசியத்தை அல்லது தீவிரத்தை எச்சரிக்கிறார் (பிரசங்கி 7:15-22).

சிலர் நீதிக்காக கடினமாக முயற்சி செய்தாலும் பலர் தேவன் சகலவற்றையும் பார்த்துக்கொள்வார் என்று இலகுவாக ஜாக்கிரதையில்லாமல் வாழ்ந்து விடுகிறார்கள். ரோமர் 6:1.

சில வேளைகளில் தடுமாறினாலும், நம்முடைய கவனம் இன்னும் பரலோகத்தின் மீது இருப்பதால் கவனமாக திரும்பவும் நீதியின் பாதையில் தொடர்கிறோம். நீதி. 24:16

கர்த்தர் மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் பரிசுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தானும் பரிசுத்தமுள்ளவானக இருக்கிறான்.

நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான்.  தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். (1யோவான் 3: 6-9).

விடியற்காலை 3 மணிக்கு இரயில் புறப்படும் என்றால் 2½ மணிக்கெல்லாம் இரயில் நிலையம் போய் சேர்ந்து காத்திருக்கிறோம். ஆனால் 8மணிக்கு வேலை என்றால் 8.15க்கு அலுவலகத்திற்குள் போவது தவறு. அதிலும் காரணம் சொல்லுவது அனுமதிக்கப்படாதது.

நம் தேவன் ஒழுக்கத்தின் தேவன்.  உபா. 8:5, நீதி. 3:12

நாமும் ஒழுக்கமாக நடந்து கொள்வது அவரின் எதிர்பார்ப்பு – நம்மை அவர் சிட்சிக்கிறார். நாம் சீராகும் வரை நம்மை ஒழுங்குபடுத்துகிறார். எபி. 12:9, எபே. 5:27

நாம் உலகத்தாரிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டபடியினால் நம்மை சுற்றிலும் நடப்பது நமக்கு எதிரிடையாக தான் இருக்கும். யோ. 17:14

அநுதினமும் சொந்த சிலுவை சுமக்க அழைக்கப்பட்டிருக்கிறோம் – மாற்கு 8:34

உலக பழக்கவழக்கத்தால் மாசுபடாமல் தன்னை தானே காத்துக்கொள்வதே தேவனுக்கு முன்பாக சுத்தமான பக்தியாக இருக்கிறது. யாக். 1:27

கிறிஸ்துவின் சரீரத்தில் நாம் அங்கமாக அழைக்கப்பட்டிருந்தால் – அந்த சரீரத்தின் தலையாகிய கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்படிதல் *மாத்திரமே* நமக்கு உகந்ததாக இருக்கிறது. கொலோ. 1:18

பிரித்தெடுக்கப்பட்டது பாக்கியம் / தேவ கிருபை. ஆனால் இறுதி வரை நிலைத்து நின்று கிரீடத்தை பெற்றுக்கொள்வது என்பது *அநுதின சவால். சலிப்பில்லாமல் அநுதினமும் சோதித்துப்பார்ப்போம்* - எபி. 12:3

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக