சனி, 15 ஏப்ரல், 2023

#1189 - உன்னையும் ஒரு பட்டயம் உருவிபோகும் என்று மரியாளிடம் சிமியோன் கூறினார் (லூக்கா 2: 35). இந்த வசனம் எப்படி நிறைவேறியது? மரியாள் எப்படி இறந்தார்?

#1189 - *உன்னையும் ஒரு பட்டயம் உருவிபோகும் என்று  மரியாளிடம்  சிமியோன்  கூறினார் (லூக்கா 2: 35).  இந்த வசனம் எப்படி நிறைவேறியது? மரியாள் எப்படி இறந்தார்?*

*பதில்* : பிறந்து 40நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மரியாளின் கையிலிருந்து வாங்கிய சிமியோனின் வார்த்தைகள் எவ்வளவாய் ஒரு தாயின் இருதயத்தை தைத்திருக்கும்?

உலக இரட்சகர் உன் வயிற்றில் பிறக்கப்போகிறார் என்று காபிரியேல் தூதன் சொன்ன போது ஏற்பட்ட அளவில்லா ஆனந்தத்தில் (லூக்கா 1:42-43, 46-55) இருந்து சந்தோஷத்துடன் பெற்றெடுத்த அன்றே குழந்தையை ஊருக்கு வெளியிலிருந்து ஊருக்குள் வந்து கண்ட மேய்ப்பர்கள் (லூக்கா 1:8-16) மற்றும் பரலோகத்திலிருந்து தேவதூதர்கள் பாட்டு பாடி அக்குழந்தையை மேய்ப்பர்களுக்கு முன்னர் வாழ்த்தி அனுப்பியதையும் அந்த வாழ்த்து செய்தியைக்கேட்ட ஒரு தாயின் மகிழ்ச்சி எப்படி பூரிப்பாயிருக்கும்!!

*குறிப்பு:*  உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவதூதர்கள் பிறந்த குழந்தை இயேசுவை துதித்த இடம் – மேய்ப்பர்கள் முன்னிலையில் !!
மரியாள், குழந்தை மற்றும் யோசேப்பின் முன்னிலையில் அல்ல!! லூக்கா 2:14

இத்தனை சந்தோஷத்துடனும் பூரிப்புடனும் மகனை தூக்கிக்கொண்டு எருசலேம் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கும் பொழுது, திடீரென்று பலநாட்களாய் அங்கிருந்த மனிதன் (சிமியோன்) மரியாளிடம் வந்து குழந்தையை தன் கையில் ஏந்திக்கொண்டு:
“தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது (லூக்கா 2:28-32)” என்றதும்;

ஏகப்பட்ட சந்தோஷத்தில் இயேசுவின் தாயாகிய மரியாளும், மரியாளின் கணவன் யோசேப்பும் ஆச்சரியத்தில் பூரித்துப்போயினர். லூக்கா 2:33

அந்த நேரத்தில் தான் சிமியோன் அந்த தாயிடம் நேரடியாக சொல்கிறார் (லூக்கா 2:34), அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக:
1-இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும்
2-எழுந்திருக்கிறதற்கும்,
3-விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
4-உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்று (லூக்கா 2:34-35)”.

இஸ்ரவேலின் இரட்சகர் (லூக்கா 2:32,55) என்று நினைத்துக்கொண்டிருக்க, இப்போது இஸ்ரவேலில் அநேகர் இவர் மூலமாக விழுவார்கள், எழுந்திருப்பார்கள், இவர் நிமித்தம் விரோதமாகப் பேசப்படும் என்று ஒருவர் சொல்லும் போது ஒரு தாயின் எண்ணத்தை நாம் நம் நினைவலையில் சிந்திக்கவேண்டும்.

தனது அருமை மகனின் மீது வரவிருக்கும் துன்பங்களும்,
தேவனால் அவருக்கு நியமிக்கப்பட்ட பாடுகளையும்,
தனது அன்பு மகன் வரும் நாட்களில் படப்போகிற வேதனைகளையும்,
மகனின் சந்திக்க இருக்கும் கோர மரணத்தையும் ஒரு தாய் முன்னமே கேட்பதாயிருந்தால் அந்த வேதனை எவ்வளவுக்கு அதிகமாய் இருக்கும்?

ஸ்திரீகளுக்குள்ளே தான் ஒரு பெரிய பாக்கியசாலி என்று ஒரு பக்கம் நினைத்த அளவில்லா சந்தோஷத்தை விட, இனி இந்த அருமை குமாரனின் வேதனையை, தான் காணவேண்டுமே என்பதே அவரது வாழ்வில் அனுதினமும் தன் இருதயத்தைத் தைத்துக்கொண்டேயிருந்திருக்கும்!! கீழேயுள்ள 3 வசனங்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருக்குமோ?

1- லூக்கா 1:29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று *சிந்தித்துக்கொண்டிருந்தாள்*.

2- லூக்கா 2:19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, *சிந்தனைபண்ணினாள்*.

3- லூக்கா 2:51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் *தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்*.

சிமியோன், மரியாளிடம் ”உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்” என்ற அந்த வார்த்தையானது; தனது மகன் மீது வரவிருக்கும் அந்த கொடிதான நாட்களை காண்கையில் தனது இருதயத்தைத் தேற்றிக்கொள்ளும்படிக்கு இக்காரியம் மரியாளுக்கு முன்னறிவிக்கப்பட்டு, பலமான விசுவாசத்தால் நிலைத்திருக்கவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டிருக்காவிடில் தன் மகனுக்கு வந்த சோதனைகளை அவரால் தாங்கியிருந்திருக்கவே முடிந்திருக்காது. கோரமான அந்த சிலுவைக்காட்சிகளில் மரியாளும் அங்கு உடன் நின்றுக்கொண்டிருந்ததை நாம் சிந்தித்து பார்க்கவேண்டும் - யோ. 19:25

இரத்தம் சொட்டிக்கொண்டிருப்பதையும், மகனின் கதறலையும், வேதனையையும் ஒரு தாய் தன் கண்களால் கண்டுக்கொண்டு நிற்க முடியுமோ? இது தன் இருதயத்தை பிளப்பது போல் அவள் உணர்வதில்லையோ? பட்டயம் தனது இருதயத்தை பிளப்பது போல் அவள் உணர்வாள் அல்லவோ!!

ஆகவே, தேவன் அதற்கு அவளை தயார் செய்தார் என்றே காண்கிறோம்.

மரியாள் எவ்வாறு மரித்தார் என்ற தகவல் வேதாகமத்தில் சொல்லப்படவில்லை.

இந்த வசனத்திற்கும் வெளி. 12:13ம் வசனத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவ்வசனம் (வெளி. 12:13) சபையைக் குறிப்பதாகும்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக