சனி, 16 அக்டோபர், 2021

ஜெபத்திற்கான பதில் ஏன் தாமதப்படுகிறது?

*ஜெபத்திற்கான பதில் ஏன் தாமதப்படுகிறது?*

By : Eddy Joel Silsbee

 

சர்வ வல்லமையுள்ள தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.

 

உருண்டு உருண்டு ஜெபித்தாலும்,

உபவாசம் இருந்து ஜெபித்தாலும்,

ஒருவிசை கூட்டி ஜெபித்தாலும்,

இருதயத்தின் ஆழத்திலிருந்து ஜெபித்தாலும்,

ஊக்கமாய் ஜெபித்தாலும்,

உலகமனைத்தையும் இணைத்து இனையத்தோடு ஜெபித்தாலும்... பலரது பதில் பெற்ற ஜெபங்களோ விரல் விட்டு எண்ணிவிடமுடியும்.

 

நம்முடைய மனு ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமெனில்;

அந்த விண்ணப்பம் யாருக்கும் பாதிப்பை தரக்கூடாது,

முறையானதாக இருத்தல் அவசியம்,

உரிமைதாரராக இருத்தல் அவசியம்,

தேசத்து பிரஜையாக இருத்தல் அவசியம்,

குறைந்த பட்சம் பிரஜையாக வேண்டும் என்ற விருப்ப மனுவாக இருக்கலாம் அல்லது சிறுபிள்ளையின் மனுவாகவும் இருக்கலாம்..... மேலும், மனுவை சரியான நபரிடத்தில் கொடுப்பதும் அவசியம் !!

 

அது போல சுயலாபத்திற்கான விண்ணப்பமாகவோ,

மற்றவரைக் குறைகூறும் விண்ணப்பமாகவோ,

சுயஉரிமையே இல்லாமல் ஏறெடுக்கும் விண்ணப்பமாகவோ,

பிள்ளை என்ற அந்தஸ்து இல்லாத விண்ணப்பமாகவோ,

முறையாக தகப்பனுக்கு ஒப்புக்கொடுக்காமல் சுய இஷ்டத்திற்கு ஏறெடுக்கப்படும் விண்ணப்பமாகவோ,

சொல்லப்பட்ட விதிகளை உதாசீனப்படுத்தி சட்டங்களுக்கு உட்படாமல் மீறின விண்ணப்பமாகவோ ஏறெடுத்தால்;

அந்த மனு நிலுவையில் போடப்படும் என்பது விதி !!

 

ஆதார வசனங்கள் இதோ…. நீதி. 28:9, 15:8, சங். 66:18, லூக்கா 13:25-27, சகரியா 7:11-13, ஏசா. 58:7-11, 1:15-16

 

மேலும், சூரியன் மறைவதற்குள் சமாதானம் அடைந்து விடவேண்டும்  என்று வலியுறுத்தப்பட்டிருக்க,

நாட்கணக்காய், மாதக்கணக்காய், வருடக்கணக்காய் கோபத்தையும்,  விரோதத்தையும் வைராக்கியத்தையும் பத்திரமாக சேமித்து வைத்த கறைபட்ட குப்பை நிறைந்த அந்த இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் எப்படி வசிப்பார்? 1கொரி. 3:17, எபே. 4:26

 

வேதத்திற்கு கீழ்படியாமல், தேவவார்த்தைக்கு ஒப்புக்கொடுக்காமல் தேவ ஆவியானவரை வெளியே நிறுத்திவிட்டு மணிக்கணக்காய் முழங்காலில் நின்றாலும் எத்தனை ஆயிரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா என்று கத்தி கதறினாலும் இயேசு கிறிஸ்து நம் ஜெபத்தை எப்படி பரிந்துரைப்பார்? அல்லது பிதா எப்படி அங்கீகரிப்பார்?

 

பல ஜெபங்கள் இன்னமும் காற்றில் அலைந்து கொண்டிருப்பதற்கு  அவர் அல்ல, நாம் தான் காரணம் !!

 

நீதிமானின் ஜெபமே கர்த்தர் காதில் விழுகிறது. 1பேதுரு 3:12, நீதி. 15:29, யோ. 9:31, யாக். 5:16

 

நமது கீழ்படிதலை முதலில் செயல்படுத்துவோம்… நம்முடைய ஜெபத்திற்கான பதில் தானாய் வந்து சேரும்.

 

*எடி ஜோயல் சில்ஸ்பி*

கர்த்தருடைய ஊழியன்,

கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்

தொடர்பு : +91 8144 77 6229

 

இப்பதிவின் YouTube லிங்க்:

https://youtu.be/RglLHjmdbK4

 

*Q&A Biblical Whatsappல் இணைய* : https://chat.whatsapp.com/K6kFZVatgRW5HJAc6zH3Sg

 

எங்களது வலைதளம் : www.kaniyakulamcoc.wordpress.com
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக